கடந்த 2 ஆண்டுகளில் குஜராத் எல்லையில் ரூ.42 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்

 

அகமதாபாத்: குஜராத் மாநில எல்லையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.42 கோடிக்கும் அதிகமான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுடனான எல்லைகள் வழியாக குஜராத்துக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலாவின் கேள்வி ஒன்றுக்கு குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், “கடந்த ஜனவரி 25ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாண்டு காலத்தில், ரூ.38.89 கோடி மதிப்புள்ள 10,49,855 இந்திய தயாரிப்பு வௌிநாட்டு மதுபான பாட்டில்களும், ரூ.3.33 கோடி மதிப்பிலான 1,59,265 பீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவை, மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்டவை. மதுபானம் கடத்தல் தொடர்பாக இதுவரை 1,018 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 141 பேரை தேடி வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அகமதாபாத் மற்றும் வதேதரா மாவட்டங்களில் அனுமதியின்றி மது அருந்தியவர்கள் மீது 32,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் அகமதாபாத் மாவட்டத்தில் மட்டும் 17,311 வழக்குகள், வதோதரா மாவட்டத்தில் 15,514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நபர்களுக்கு மதுபானம் விற்கும் நபர்கள் மீதும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

Related Stories: