சின்னசேலம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி

சின்னசேலம், மார்ச் 10: சின்னசேலம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதி தந்தையின் கனவை நிறைவேற்றிய மாணவியை மக்கள் பாராட்டினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகள் கயல்விழி என்பவர் தாகம்தீர்த்தாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மேலும் தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கயல்விழியின் தந்தை மாசிலாமணி நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் தந்தையின் கனவை நிறைவேற்ற அரசு போதுத்தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வந்த கயல்விழி தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று நடந்த வேதியியல் தேர்வை எழுதி விட்டு அழுகையுடன் வெளியே வந்தார். அப்போது அந்த மாணவி கூறுகையில், என் தந்தை இருக்கும்போது நீ நல்லா படித்து உயர்ந்த நிலைக்கு போக வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார். அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாகத்தான் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வை எழுதி உள்ளேன் என்று கூறினார். இந்த மாணவியின் மன உறுதியை ஆசிரியர்கள், மாணவர்கள் மக்கள் பாராட்டினர்.

Related Stories: