இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே மிக்கேல்பட்டினத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன் (31). இவர் மூன்று வழக்குகளில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நேற்று அவரை போலீசார் தேடி சென்ற போது, திருப்பாச்சேத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானூர் மயானம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் பொறுப்பு இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

கைது செய்ய முயன்ற போது, ஊர்க்காவலன் வாளால் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியனை தாக்க முயன்றுள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர், எச்சரிக்கை செய்யும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இருந்தபோதிலும் ஊர்க்காவலன் மீண்டும் தாக்க முயன்றதால், தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அவரது வலது காலில் சுட்டார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஊர்க்காவலன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏ கிரேடு குற்றவாளியான ஊர்க்காவலன் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா வழக்குகள், அடிதடி வழக்குகள், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் வழக்குகள் என மொத்தம் 33 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: