திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கடந்த சில வாரங்களாக கேரளாவில் நடத்திய புதுயுக பயணத்தின் நிறைவு விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது: அமெரிக்காவுடன் வியாபார ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதின் மூலம் பிரதமர் மோடி நம் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். அமெரிக்கா சொல்லும் நாட்டில் இருந்து தான் பெட்ரோல் வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நம் நாட்டு மக்களின் விவரங்கள் அனைத்தும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஏராளமான எப்ஸ்டீன் பைல்கள் இனியும் வெளிவர இருக்கிறது. அந்த பைல்களில் பிரதமர் மோடியின் பெயரும் இருக்கிறது. அதனால் தான் பயந்து அமெரிக்காவுடன் அவர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் நம் நாட்டில் உள்ள விவசாயிகள், சிறு தொழில் செய்பவர்கள் உள்பட ஏராளமானோருக்கு கடும் பாதிப்பு ஏற்படும். அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் இப்போது மோடியை கட்டுப்படுத்துகிறார். மோடியை டிரம்ப் எப்படி கட்டுப்படுத்துகிறாரோ அதேபோல் தான் கேரள முதல்வர் பினராயி விஜயனை மோடி கட்டுப்படுத்தி வருகிறார். இது எப்படி சாத்தியமாகிறது என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். என் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை என்னை 55 மணிநேரம் விசாரணை நடத்தியது. ஆனால் இதுவரை பினராயி விஜயனிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. பாஜவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்படுவது தான் இதற்கு காரணமாகும். இருவரும் சேர்ந்து கேரளாவில் காங்கிரசை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 திட்டங்களை செயல்படுத்த தீர்மானித்துள்ளோம்.
இதன்படி கேரள அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் கொண்டுவரப்படும். கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும். நல ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ 3000 ஆக அதிகரிக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரில் அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ. 25 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
