கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஈரான் நாட்டு போர்க்கப்பலை வீடியோ எடுக்க முயற்சி: தனியார் டிவி நிருபர், கேமராமேன் உள்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈரான் நாட்டு போர்க்கப்பலை வீடியோ எடுக்க முயன்ற ஆங்கில தனியார் தொலைக்காட்சி நிருபர், கேமராமேன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாகப்பட்டினத்தில் நடந்த போர்க்கப்பல்களின் சாகச நிகழ்ச்சிக்குப் பின் ஈரானுக்கு திரும்பிய அந்நாட்டு போர்க்கப்பலை இலங்கை நாட்டு எல்லையில் வைத்து அமெரிக்கா தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் 80க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விசாகப்பட்டினத்திலிருந்து திரும்பிச் சென்ற இன்னொரு ஈரான் நாட்டு போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசிடம் ஈரான் அரசு கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து இந்த போர்க்கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கப்பல் கொச்சி மட்டாஞ்சேரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போர்க்கப்பலை வீடியோ எடுப்பதற்காக ஒரு ஆங்கில தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த நிருபரும், கேமராமேனும் கொச்சி மரைன் டிரைவ் பகுதியிலிருந்து ஒரு படகை வாடகைக்கு எடுத்து சென்றனர். அவர்கள் ஈரான் போர்க்கப்பலை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அதை கவனித்தனர்.

உடனடியாக அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆங்கில தனியார் தொலைக்காட்சி நிருபர் சங்கர், கேமராமேன் மணி மற்றும் படகு ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் கொச்சி துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: