கொல்கத்தா: ‘பாஜவின் உத்தரவுப்படி, மேற்கு வங்கத்திற்கு வந்த ஜனாதிபதி முர்மு கூட அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது’ என மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். சிலிகுரி அருகே கோஷைபூரில் நடந்த பழங்குடியின சமூகத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி முர்மு, ‘‘ முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு தங்கையை போன்றவர்.
ஆனால் என்னை வரவேற்க அவரோ அவரது அமைச்சர்களோ யாருமே வராதது பற்றி மம்தா வருந்துவாரா என தெரியவில்லை. முதலில் இந்த நிகழ்ச்சி பிதானி ல் நடப்பதாக இருந்தது. ஆனால் மாநில அரசால் இது கோஷைபூருக்கு மாற்றப்பட்டது. ஓட்டு போய் விடும் என்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்ததா என தெரியவில்லை’’ என்றார். மேலும் மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களின் வளர்ச்சி வேகம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:
பழங்குடியினருக்கு எந்த நலத்திட்டமும் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டுவதன் மூலம், பாஜவின் ஆலோசனை பேரில் ஜனாதிபதி அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது. இதை சொல்வதற்கு கூட நான் வெட்கப்படுகிறேன். நாங்கள் ஜனாதிபதியை மதிக்கிறோம். ஆனால் அவர் அரசியல் செய்ய அனுப்பப்பட்டுள்ளார். மன்னிக்கவும் ஜனாதிபதி அவர்களே. உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் நீங்கள் பாஜவின் கொள்கைகள், பாஜ அறிவுறுத்தல்களால் வழிநடத்தப்படுகிறீர்கள்.
ஜனாதிபதியின் நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில அரசு பிரதிநிதிகள் யாரும் அனுப்பப்படவில்லை என உங்களுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பங்கேற்ற பழங்குடியின நிகழ்ச்சி பற்றி கூட எனக்கு தெரியாது. யார் அதை ஏற்பாடு செய்தார்கள், யார் கலந்து கொண்டார்கள், யார் நிதியளித்தார்கள் என தெரியாது. நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை வந்தால் உங்களை நான் வரவேற்க முடியும். ஆனால் தேர்தல் நேரத்தில் மீண்டும் மீண்டும் வந்தால் எல்லா சமயத்திலும் என்னால் எப்படி கலந்து கொள்ள முடியும்?
நாங்கள் எப்போதும் உங்களை பின்தொடர வேண்டுமா? காத்தாடி பறக்கவிடுவது போல, நூல் பிடித்து சுற்றித் திரிய வேண்டுமா? எஸ்ஐஆர் பிரச்னையில் மக்களுக்காக நான் தர்ணாவில் இருக்கிறேன். எஸ்ஐஆரால் எத்தனை பழங்குடியின வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை வகிக்கிறீர்கள். பாஜவின் ஆலோசனை பேரில் தேர்தலின் போது இப்படி அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு மம்தா பேசினார். இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பாஜ தலைவர்கள் மம்தாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
* மணிப்பூர் விவகாரத்தில் அமைதி காத்தது ஏன்?
மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இங்கு கேள்வி கேட்கும் நீங்கள், மணிப்பூரில் பழங்குடியினர் அட்டூழியங்களை எதிர்கொள்ளும் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மபி, சட்டீஸ்கரில் அட்டூழியம் நடக்கும் போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? மேற்கு வங்கத்தை மட்டும் குறிவைப்பது ஏன்? நக்சலைட் இயக்கத்தின் பெயரில் இங்கு ரத்தம் சிந்தப்பட்ட போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? பாஜ எங்கே இருந்தது? இப்போது நிலைமை அமைதியாக இருப்பதால் பாஜ வந்துவிட்டது’’ என்றார்.
