புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீது இந்தியா கூட்டணி கட்சிகள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க உள்ளது. ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தின் முதல்நாளான நாளை மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்கத் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றே தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிகிறது. இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்களான முகமது ஜாவத், கே.சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் முன்மொழிய உள்ளனர். இந்தத் தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு ‘கொறடா’ உத்தரவை பிறப்பித்துள்ளன.
இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் விமான நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. காணொலி காட்சி மூலம் இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மக்களவையின் மிகச் சிறந்த சபாநாயகர் ஓம்பிர்லா. அவையில் கட்சி வேறுபாடுகளை மறந்து, அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்பவர். அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவர். ஒருவரை கூட அவமதிக்க மாட்டார். ஆனால், செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் குல வழக்கமான அமளியில் ஈடுபடும்போதும் குடும்பத்தலைவராக இருந்து அவர்களை சமாளிப்பவர் ஓம்பிர்லா என்று பாராட்டினார்.
