பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம் 8 லட்சத்து 6,370 மாணவர்கள் தேர்வு எழுதினர்: 9,919 பேர் ஆப்சென்ட்

சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 8 லட்சத்து 6,370 மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வெழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன.

இத்தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,412 மையங்களில் 8 லட்சத்து 6,370 மாணவர்கள் எழுதினர். 1600 தனித்தேர்வர்கள் உள்பட 9,919 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு செய்தார். பள்ளிக்கல்வித்துறைச் செயலர் சந்தரமோகன், இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது, நிருபர்களுக்கு அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் தூங்காமல், சாப்பிடாமல் உடல்நலனை கெடுத்துக் கொள்ளக்கூடாது. நன்கு படித்துவிட்டு, சரியாக உறங்கிவிட்டு பின்னர் தேர்வு எழுத வேண்டும். அதேபோல், பெற்றோர்களும் மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. இது ஈடு செய்ய முடியாத இழப்பு. முடிந்த வரை, அருகே உள்ள தேர்வு மையம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்பாராத நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இத்தகைய அசம்பாவிதங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் தமிழ் கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் மொத்தமுள்ள 14ல் 3 வினாக்கள் மட்டும் பாடத்துக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டது. மற்ற கேள்விகள் எளிதாகவே இருந்தன. சிறு வினா, மனப்பாடம், இலக்கணம், நெடுவினா ஆகிய பகுதிகளில் காலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வுகளில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் இருந்தன. இதனால் சராசரியாக படிக்கும் மாணவர்கள்கூட தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தனர். தொடர்ந்து பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வு மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 26ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 8ல் வெளியிடப்பட உள்ளது.

* இன்று முதல் பிளஸ் 1 அரியர்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2018ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. மாணவர்களுக்கான அழுத்தத்தை குறைக்கும் விதமான நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனினும், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அந்த பாடங்களை அரியர் தேர்வாக எழுத வேண்டுமென தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என 25,051 பேர் எழுதவுள்ளனர்.

Related Stories: