தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது; விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: ஜவாஹிருல்லா பேட்டி

தாம்பரம்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தாம்பரத்தில் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் தலைமை வகித்தார். கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறுகையில், ”சட்டமன்ற தேர்தல் வரக்கூடிய நிலையில் திமுக கூட்டணி நாள்தோறும் பலப்பட்டு வருகிறது. தேமுதிக இணைந்திருக்கிறது. அரசியல் அனுபவம் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதை வரவேற்கிறோம். நாள்தோறும் பலம் பொருந்தி வரக்கூடிய திமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தமிழ்நாட்டில் வரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆட்சியினுடைய நற்பலன்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதாவது ஒரு வகையில் சென்று சேர்ந்திருக்கிறது. இதற்கு நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி வருவதற்கு வாக்களிப்பார்கள். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார். பாஜ, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதமான பாஜவின் பாசிச போக்கை நன்கு உணர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுத்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தொகுதி ரீதியான எங்கள் கோரிக்கைகளை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவிடம் எடுத்துரைத்திருக்கிறோம். விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்” என்றார்.

Related Stories: