சென்டிமென்ட்டில் அதிமுகவை தட்டி தூக்கும் பாஜ

 

தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, எப்போதும் விஐபி அந்தஸ்து கொண்ட ஒரு களம். 2021 தேர்தலில் அதிமுகவின் தளவாய் சுந்தரம் இங்கே வெற்றி பெற்று, தொகுதியை அதிமுகவின் கோட்டையாக மாற்றினார். ஆனால், 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், அதே அதிமுகவிற்கு ஒரு புதிய ‘தலைவலி’யாக உருவெடுத்துள்ளது.

அது வேறு யாருமல்ல, கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜதான். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஒரு ஆச்சரியமான உண்மை புலப்படும். கடந்த பல தசாப்தங்களாக, இந்தத் தொகுதியில் ‘ஒருமுறை வென்றவர் மறுமுறை வென்றதில்லை’ என்ற வினோதமான சென்டிமென்ட் நிலவி வருகிறது.

இப்படி ‘ஊசலாட்டம்’ போன்ற தேர்தல் முடிவுகளே இங்கு தொடர்கின்றன. இந்த வரலாற்றுச் சூழலைத் தான் பாஜ தற்போது கையில் எடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜவிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக, இந்து வாக்குகள் மற்றும் மீனவர் சமூக வாக்குகளைக் குறிவைத்து பாஜ களம் காண்கிறது. ‘குமரி முனையில் ஒருமுறை வென்ற கட்சி அடுத்த முறை வெல்வது கடினம். எனவே, இந்த முறை பாஜ போட்டியிட்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்’ என்ற வாதத்தை பாஜ மேலிடம் முன்வைத்து வருகிறது. இந்த ‘சென்டிமென்ட்’ காரணியைக் காட்டி, அதிமுகவிடமிருந்து இந்தத் தொகுதியைத் தட்டிப் பறிக்க பாஜ திரைமறைவு வேலைகளைத் தொடங்கியுள்ளது.

தற்போதைய எம்எல்ஏ தளவாய் சுந்தரம், அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவர். தொகுதி முழுவதும் செல்வாக்கு கொண்டவர். இருப்பினும், பாஜவின் இந்த ‘சென்டிமென்ட்’ அரசியல் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘தொகுதியில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளைக் கண்டு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்’ என்று அதிமுகவினர் கூறினாலும், ‘மாற்றம்’ என்ற மனநிலையில் இருக்கும் வாக்காளர்களை பாஜவின் வியூகம் கவரக்கூடும் என்பது அதிமுகவின் கவலையாக உள்ளது.

அதிமுக, தனது கோட்டையைத் தக்கவைக்க, ‘சென்டிமென்ட்’ உடைக்கப்படும் எனத் தீவிரப் பிரசாரத்தைத் திட்டமிடுகிறது. பாஜ, தேசியவாத மற்றும் மதரீதியான வாக்குகளுடன், ‘புதிய முகம்’ என்ற கோஷத்துடன் தொகுதியைக் கேட்கிறது. திமுக கூட்டணி, அதிமுக-பாஜ இடையேயான மோதலை பயன்படுத்தி, இழந்த தொகுதியை மீட்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

முதல்முறையாகக் களமிறங்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இளைஞர்களின் வாக்குகளைப் பிரித்தால் அது யாருக்குச் சாதகமாகும் என்ற கணக்கும் இதில் அடங்கியுள்ளது. அரசியலில் சென்டிமென்ட்டுகள் என்பது எப்போதுமே நிலையானவை அல்ல. ஆனால், குமரி முனையைப் பொறுத்தவரை அந்த சென்டிமென்ட் ஒரு உளவியல் ரீதியான பலத்தை பாஜவிற்கு அளித்துள்ளது.

Related Stories: