திருப்பத்தூரில் நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். எம்பி சி.என்.அண்ணாதுரை வரவேற்றார். கூட்டத்தில் துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே டபுள் டிஜிட் 11.19 என்ற அடிப்படையில் இன்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பாஜக தமிழகத்தில் நேர்வழியில் உள்ளே நுழைய முடியாது என்ற காரணத்தினால் தற்போது பல்வேறு குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால் அது பலிக்காது. பாஜவின் சார்பு அணிகள் என்னவென்றால் சிபிஐ, இடி, தேர்தல் ஆணையம். இதையெல்லாம் வைத்து மிரட்டி அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிகளுக்குள் வருகிறீர்களா இல்லை, உங்களை பிடித்து ஜெயிலில் போடட்டுமா என்று மிரட்டி கூட்டணி உருவாகி உள்ளது.
2 நாளுக்கு முன்ன பிரதமர் திருச்சி வந்திருந்தார். 10 நாளுக்கு முன்பு மதுரை வந்திருந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு வருவார். ஆனால் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு வழங்கமாட்டார். திருச்சியில் கூட்டணி கட்சியான எடப்பாடி பழனிசாமி படத்தை அகற்றிய கட்சிதான் பாஜ. தேர்தல் முடிந்ததும் அதிமுகவை பாஜ விழுங்கி விடும். பீகாரில் நிதிஷ்குமார் 10 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்தான் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இன்று அவரை ஓரம் கட்டி விட்டு பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. 10 முறை முதலமைச்சராக இருந்த பீகார் முதல்வருக்கு இந்த நிலைமை என்றால் ஊர்ந்து சென்று போய் பதவியைப் பிடித்த எடப்பாடிக்கு என்ன நிலைமை என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பாஜவை எதிர்க்க வேண்டும் என்றால் ஒரு முதுகெலும்புள்ள முதல்வர் இருக்க வேண்டும்.
அது எடப்பாடியால் நிச்சயமாக முடியாது. பாஜவை எதிர்க்க கூடிய சக்தி நமது தலைவருக்கு மட்டும் தான் உள்ளது. மக்களும் அதை உணர்ந்துள்ளனர். ஒரு பழமொழி உள்ளது ஜாடிக்கேத்த மூடி என்று. இப்போது மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி இருந்து வருகிறார். இன்னும் 30 நாட்களில் தேர்தல் வந்துவிடும். திமுககாரன் என்றால் சிங்கிள் டீ குடித்துவிட்டு இரவு பகலாக வேலை செய்யும் ஒரு கட்சி தொண்டன். கடைகோடி தொண்டன் தான் என்று மற்ற கட்சிகள் பேச வேண்டும். அனைத்து அணிகளும் சிறப்பாக வேலை செய்கிறது என்று போட்டி போட்டு வேலை செய்ய வேண்டும். நிச்சயம் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவோம் வெல்வோம் 200 என்று தலைவர் தெரிவித்துள்ளார். அதனை நாம் நிறைவேற்றி காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* அதிமுக செயல்வீரர் கூட்டம்: புறக்கணித்த மாஜி எம்எல்ஏ: முன்னாள் அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி
கடலூரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடந்தது. பாஜ கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு தலைவர் பழ.தாமரைக்கண்ணன், அமமுக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாரிகள் கலந்து கொண்டனர். தாமரைக்கண்ணன் பேசுகையில், அதிமுகவில் எம்.சி.சம்பத்துக்கு கடலூர் தொகுதிக்கு சீட்டு கிடைக்கும். கூட்டணி கட்சிக்கு கொடுத்தாலும் துரோகம் செய்யாமல் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தல் பணியை ஈடுபட வேண்டும், என்றார். இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள், கடலூர் தொகுதியை அதிமுகவுக்கு தான் ஒதுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இக்கூட்டத்தை பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளார். மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத், பணருட்டியில் போட்டியிடும் வகையில் தேர்தல் பணிகளை செய்து வருவதால் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்.
