பல்லேகலே: டி.20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2ல் இன்று இரவு 7 மணிக்கு இலங்கையின் பல்லேகல்லேவில் நடைபெறும் கடைசிபோட்டியில் இலங்கை-பாகிஸ்தான் மோதுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டநிலையில் 2வது போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்த பாகிஸ்தான் ஒரு புள்ளியுடன் உள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து 3 போட்டியிலும் கம்பீரமாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. நியூசிலாந்து, ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ரத்து என 3 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளது.
இன்று பாகிஸ்தான் வென்றால் 3 புள்ளியாக மாறும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும். நியூசிலாந்து ரன்ரேட்+1.390, பாகிஸ்தான் ரன்ரேட் -0.461 ஆக உள்ளது.
பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையவேண்டும் என்றால் முதலில் பேட் செய்யும்பட்சத்தில் 68 ரன் வித்தியாசத்திலும், சேசிங் செய்தால் 13 ஓவருக்குள்ளும் வெற்றிபெற வேண்டும். இதனால் நெருக்கடியில் களம் இறங்குகிறது. ஆனால் இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடும் சவாலான காரியம்.
அதிலும் பிரமாண்ட வெற்றி வேண்டும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இலங்கையும் சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியுடன் வெளியேற முனைப்பு காட்டும். ஒருவேளை பாகிஸ்தான் இன்று அதிசயம் நிகழ்த்தி வென்றால் அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் கொழும்பில் மோதும். நியூசிலாந்து தகுதி பெற்றால் இதே தென்ஆப்ரிக்காவுடன் கொல்கத்தாவில் பலப்பரீட்சை நடத்தவேண்டி இருக்கும். பிரமாண்ட வெற்றியை விட முதலில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வீழ்த்துவதே சந்தேகம் தான்.இரு அணிகளும் இதற்கு முன் டி.20 போட்டியில் 29 முறை மோதி உள்ளன. இதில் 17ல் பாகிஸ்தான் 12ல் இலங்கை வென்றுள்ளது.
