அகாபுல்கோ: மெக்சிகன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இத்தாலி வீரர் பிளேவியோ கோபாலி, சீன வீரர் வு யிபிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் இத்தாலி வீரர் பிளேவியோ கோபாலி-சீன வீரர் வு யிபிங் மோதினர். முதல் செட்டில் இரு வீரர்களும் ஆக்ரோஷமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டைபிரேக்கர் வரை அந்த செட் நீடித்தது.
கடைசியில் 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கோபாலி வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோபாலி 6-1 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாபோ ஜூனியர், இத்தாலி வீரர் மாத்தியா பெலுச்சி மோதினர். போட்டியின் துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய பிரான்சஸ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
