டி.20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி; இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நாளை ஈடன் கார்டனில் பலப்பரீட்சை: அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்?

கொல்கத்தா: ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளையுடன் நிறைவடைகிறது. நாளை இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா -வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் 4 போட்டியிலும் வென்ற இந்தியா, சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்த நிலையில் சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா பார்முக்கு திரும்பியது இந்தியாவுக்கு சாதகமாகும். இஷான் கிஷன் (214), கேப்டன் சூர்யகுமார் (213) ஆகியோருடன் கடந்த போட்டியில் அதிரடி அரைசதம் விளாசிய ஹர்திக் பாண்டியா, திலக்வர்மா பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். பவுலிங்கில் பும்ரா (8 விக்கெட்), அர்ஷ்தீப் சிங்(7), வருண் சக்ரவர்த்தி (11), அக்சர் படேல்(7) தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வர்.

மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் லீக்கில் 4 போட்டியில் வென்றதுடன் சூப்பர் 8ல் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. ஆனால் 2வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. பேட்டிங்கில் ஹெட்மயர் 221 ரன் விளாசி உள்ளார். கேப்டன் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், பாவல், சேஸ், ரூதர்போர்ட், ஆல்ரவுண்டர்கள் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், மத்தேயு ஃபோர்டு என 9வது வரிசை வரை நீடிக்கிறது. அந்த அணியின் பவுலிங் தான் சொதப்பலாக உள்ளது. சுழல் குடகேஷ் மோதி 10 விக்கெட் எடுத்துள்ளார். நாளை அகேல் ஹோசின் ஆடும் லெவனில் இடம்பெறக்கூடும்.

நாளை வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் வாழ்வா, சாவா போட்டியாக அமைந்துள்ளது. வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி உலக கோப்பைக்கு முன் சொதப்பி வந்த நிலையில் தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. சொந்த மண்ணில் வெற்றிபெற வேண்டிய கூடுதல் நெருக்கடி வேறு இந்தியாவுக்கு உள்ளது. ஈடன் கார்டன் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காத்திருக்கிறது. நாளை போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதியில் குரூப் 2ல் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்துடன் மோதும்.

தந்தை உடல் அடக்கம் முடிந்து அணியுடன் இணைந்த ரிங்கு!
இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நொய்டா ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டி முடிந்த சில மணிநேரத்தில் காலமானார். இதையடுத்து ரிங்கு உடனடியாக சொந்த ஊரான அலிகார் புறப்பட்டார். நேற்று தந்தையின் உடல் அடக்கம் முடிந்த நிலையில் இன்று கொல்கத்தா திரும்பி அணியுடன் இணைந்தார். நாளை இந்திய அணியின் ஆடும்லெவனில் மாற்றம் இருக்காது என்பதால் ரிங்கு களம் இறங்க வாய்ப்பு இல்லை.

ராசியான மைதானம்…
* கொல்கத்தா ஈடன் கார்டன் இந்தியாவுக்கு ராசியான மைதானம். இங்கு இதற்கு முன் 8 டி.20 போட்டிகளில் ஆடி
உள்ளது. இதில் 7ல் வென்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி
(2011ல் இங்கிலாந்துக்கு எதிராக) அடைந்துள்ளது.
* வெஸ்ட்இண்டீஸ் 7 போட்டியில் ஆடி 3ல் வெற்றி, 4ல் தோல்வி கண்டுள்ளது.
* ஒட்டுமொத்தமாக இங்கு இதுவரை 17 டி.20 போட்டி நடந்துள்ளது. இதில் 9ல் முதலில் பேட் செய்த அணியும், 8ல் சேசிங் அணியும் வென்றுள்ளன.
* நடப்பு உலக கோப்பையில் 5 போட்டி நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 4ல் வென்றுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் இங்கு லீக் போட்டியில் இத்தாலி,
ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆடி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நேருக்கு நேர்…
இரு அணிகளும் இதற்கு முன் டி.20 போட்டியில் 30 முறை மோதி உள்ளன. இதில் 19ல் இந்தியா, 10ல் வெஸ்ட்இண்டீஸ் வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் வெஸ்ட்இண்டீஸ் 3-2 என முன்னிலையில் உள்ளது. உலக கோப்பையில் 4 போட்டியில் மோதியதில் இந்தியா 3, வெ.இண்டீஸ் 1ல் வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 2016ல் அமெரிக்காவின் லாடர்ஹில்லில் 244/4 ரன் எடுத்தது தான் பெஸ்ட் ஸ்கோர். இதே போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 245/6 ரன் எடுத்து சேசிங் செய்தது தான் அவர்களின் அதிகபட்ச ரன்.

மழைக்கு வாய்ப்பு இல்லை!
கொல்கத்தாவில் நாளை மழைக்கு வாய்ப்பு இல்லை. வானம் தெளிவாக காணப்படும். வெப்பநிலை குறைந்த பட்சம் 70, அதிகபட்சமாக 90 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.

Related Stories: