உலகக்கோப்பை டி20 சூப்பர் 8 இங்கிலாந்து அணி வெற்றி

கொழும்பு: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று போட்டி, குரூப் 2ல் நேற்று, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்தது. அதில் பலம் வாய்ந்த இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து துவக்க வீரர்களாக நியூசிலாந்தின் டிம் செபெர்ட், ஃபின் ஆலன் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்த நிலையில், அடில் ரஷித் பந்தில் டிம் செபெர்ட் (35 ரன்) ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வில் ஜாக்ஸ் வீசிய 8வது ஒவரில் ஃபின் ஆலன் 29 ரன்னுக்கு, ஜேகப் பெத்தெலிடம் கேட்ச் தந்து வீழ்ந்தார். அதன் பின், ரச்சின் ரவீந்திரா அதிக நேரம் தாக்குப்பிடிக்காமல் 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்து வந்த நிலையில் மார்க் சாப்மேன் 15, டேரில் மிட்செல் 3 ரன்னில் அடுத்தடுத்து வீழ்த்து அணியின் ரன் வேகத்தை குறைத்தனர். பின்னர், கிளென் பிலிப்சுடன், கேப்டன் மிட்செல் சான்ட்னர் இணை சேர்ந்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே கிளென் பிலிப்ஸ் (39 ரன்) ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

கடைசி ஓவரில் கோல் மெக்கொன்சி 14 ரன் எடுத்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்திருந்தது. சான்ட்னர் ஆட்டமிழக்காமல் 9 ரன்னுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹன் அகமது தலா 2, லியாம் டாசன் 1 விக்கெட் எடுத்தனர். 2வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டாம் 33 ரன்(25 பந்து), வில் ஜேக்ஸ் 32 ரன் எடுத்தனர். நியூசி பந்து வீச்சில் ரச்சின் ரவிந்திரா 3 விக்கெட், மேட் ஹெண்ட்ரி, பெர்குசன், கிளென் பிலிப்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Related Stories: