இந்திய மகளிருடன் 2வது ஓடிஐ: ஆஸி அமர்க்கள வெற்றி; தொடரை கைப்பற்றி அசத்தல்

ஹோபர்ட்: இந்தியா மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் ஆஸி வெற்றி பெற்ற நிலையில் நேற்று, ஹோபர்ட் நகரில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா (31 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 11 ரன்னிலும், துவக்க வீராங்கனை பிரதிகா 52 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின் வந்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சிறப்பாக ஆடி 54 ரன்கள் குவித்தபோதும் மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால், 50 ஓவரில் இந்திய அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதையடுத்து, 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி மகளிர் களமிறங்கினர். அதன் துவக்க வீராங்கனை கேப்டன் ஆலிஸா ஹீலி 6 ரன்னில் வீழ்ந்தபோதும் மற்றொரு துவக்க வீராங்கனை போப் லிட்ச்பீல்ட், ஜார்ஜியா வால் உடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த இணை 119 ரன்கள் விளாசிய நிலையில் லிட்ச்பீல்ட் 80 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜார்ஜியா வால் 82 பந்துகளில் 101 ரன்கள் விளாசி அவுட்டானார். அவரைத் தொடர்ந்து பெத் மூனி 31, அனபெல் சதர்லேண்ட் 10 ரன்னில் வீழ்ந்தனர். இருப்பினும், 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்து ஆடிய, ஆஷ்லே கார்ட்னர் (19 ரன்), தஹிலியா மெக்ராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செனறனர். அதனால், 36.1 ஓவரில் ஆஸி, 5 விக்கெட் இழந்து 252 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் ஆஸி மகளிர் கைப்பற்றினர்.

Related Stories: