உலக கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில் சாதிக்குமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் இன்று மல்லுக்கட்டு

சென்னை: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில் சென்னையில் இன்று, இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன. லீக் சுற்றுப் போட்டிகளில் இந்தியா சிறப்பான வெற்றிகளை குவித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றபோதும், சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது, இந்திய அணியில் உள்ள பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. மேலும், இன்று நடக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் தோற்றால் செமிபைனலுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகி விடும். அதனால், இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பெரிய வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற இந்திய வீரர்கள் முனைப்பு காட்டுவர்.

அதேசமயம் ஜிம்பாப்வே அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணி பல சந்தர்ப்பங்களில் துணிச்சலுடன் வெற்றி பெற போராடும் இயல்பு கொண்டது. ஜிம்பாப்வேயை வெல்ல இந்திய அணியில் உள்ள குறைகளை களைய வேண்டியது அவசியம். 3வது விக்கெட்டுக்கு ஆடும் வீரர் ரன் குவிப்பாளராக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, வயிற்று தொற்று பிரச்னையால் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். திலக் வர்மா, தன் தவறுகளை திருத்திக் கொண்டு அதிரடி காட்டினால் அணிக்கு சாதகமாக இருக்கும். நடப்பு தொடரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெரியளவில் ஸ்கோர் குவிக்காதது இந்திய அணிக்கு கெடுவாய்ப்பாக உள்ளது. இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்திலும், திலக் வர்மா 4வது வீரராகவும் ஆட வாய்ப்பு உள்ளது.

ஜிம்பாப்வே அணியை பொறுத்தவரை அதன் சுழல் பந்து வீச்சாளர்கள் கிரீமி கிரெமர், சிக்கந்தர் ராஸா, ரையான் பர்ல், பெரியளவில் அச்சுறுத்தும் வகையில் பந்துகள் வீசாதது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், பிளெஸிங் முஸாரபானி, ரிச்சர்ட் நிகரவா, பிராட்லி இவான்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மாறாக, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா, வருண், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வர்.
போட்டி துவங்கும் நேரம்: இரவு 7 மணி.

Related Stories: