தனியார் பஸ் மோதி ஐஸ் கம்பெனி ஓனர் பலி

சேலம், பிப்.20: சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (46). இவர் ஐஸ் கம்பெனி நடத்தி வந்தார். நேற்று நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு டூவீலரில் சென்று விட்டு, மீண்டும் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சீலநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ், பாலசுப்பிரமணியத்தின் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ், முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியதில் காரும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: