மதுரை: மதுரை பனகல் ரோட்டிலுள்ள அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர், அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்தார். அவரிடம் செய்தியாளர்கள், ‘சசிகலா புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்காங்க. எதிரிகளை வேரறுக்கணும்னு சொல்றாங்களே?’ என கேட்க, ‘‘அப்படியா, நான் பார்க்கல… பார்த்துட்டு சொல்றேன். நான் பார்க்கலங்க..’’ என்றார். ‘‘அவங்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததுன்னு சொல்றாங்களே?’ என கேட்க, ‘‘ஏங்க அதாங்க அத பார்க்கவே இல்லை. வீடியோ நான் பார்க்கலங்க’ என்றார். அப்போது ‘சசிகலா மூவர் படத்துடன் கட்சிக்கொடி எல்லாம் வெளியிட்டிருக்காங்க’ என்றதும், ‘‘அதாங்க நான் பார்த்துட்டு சொல்றேன். மத்ததை பத்தி பேசுங்க’’ என்றார்.
‘டிடிவி.தினகரன் நேரடியாக பாஜவிடம்தான் கூட்டணி பேசுவோம், அதிமுகவிடம் பேசமாட்டோம். என்னை கொண்டு வந்தது பாஜதான்னு சொல்கிறாரே?’ என்றதற்கு, ‘‘நீங்க அவரிடம் தாங்க கேட்கணும். என்னிடம் கேட்டு என்ன செய்ய? எங்க பொதுச் செயலாளரிடம் கேளுங்க’’ என்றார். ‘திமுக கூட்டணி பலமானதுன்னு அமித்ஷா ஓபிஎஸ்சிடம் சொன்னாராமே?’ என்றதும், ‘‘ஏங்க ஓபிஎஸ் பேச்செல்லாம் ஒரு பேச்சா? அவரே இங்கிருந்து போயி அனாதையா நிக்கிறாரு. என்ன செய்றதுன்னே அவருக்கு தெரியல’’ என்றார். தொடர்ந்து, ‘‘பாஜ அரசு தமிழ்நாட்டுக்கு நிறைய நிதி கொடுத்திருக்காங்க.
திருக்குறள், திருமறையை எந்த பிரதமராவது பேசி இருக்காரா’’ என்றவரிடம், ‘மோடியா, லேடியான்னு ஜெயலலிதா பேசினாரே?’ என நிருபர்கள் கேட்க, ‘‘தேர்தலுக்கு தேர்தல் அதெல்லாம் மாறுமுங்க. ஏதும் கிடைக்கலன்னா சீசீ இந்த பழம் புளிக்கும்னு சொல்வாங்கள்ல. அப்படித்தாங்க விஜய்யும் கூட்டணி சேர்க்கத்தான் முயற்சி செஞ்சாரு. நம்ம செங்கோட்டையன், அவரு வர்றாருங்க இவரு வர்ராங்க, இப்போ வந்துருவாங்க, அப்போ வந்துருவாங்கன்னு சொன்னாரு, அப்போதே கூட்டணியை தேட மாட்டோம்னு விஜய் சொல்லி இருக்கலாமே?’’ என்றார்.
‘மோடியா லேடியா’ன்னு ஜெயலலிதா கேட்டதெல்லாம் தேர்தலுக்காகத்தான்
