மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலம்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்.16: சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நடந்த மகாசிவராத்திரி பெருவிழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஜெகத்ரட்சகன் எம்.பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பேரூர் பட்டீசுவரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் ஆகிய 12 கோயில்களில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடந்தன.

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சார்பில் கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரி பெருவிழா மங்கள இசை மற்றும் திருமுறை விண்ணப்பத்துடன் தொடங்கியது. இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து, தேவி சண்முக சுந்தரம் பக்தி இசை நிகழ்ச்சி, கலைமாமணி சாரதா ராகவின் பக்தி களஞ்சியம், மோகினியாட்டம், சூப்பர் சிங்கர்கள் தனுமிதா, அபினேஷ், சுஜேஷ் குழுவினரின் பக்தி இசை, கலைமாமணி தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, சிவமயம் மற்றும் சிவதாண்டவம் எனும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

முன்னதாக அமைச்சர் சேகர்பாபு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்களை இரவு நேரத்தில் பல வண்ண விளக்குகளால் ஒளிரூட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ரேணுகாதேவி, கவெனிதா, ஜெயப்ரியா, மாநகராட்சி மன்ற உறுப்பினர் விமலா கிருஷ்ணமூர்த்தி, கோயில் அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, மருதமுத்து, ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, உற்சவர் மண்டபத்தில் சிவன் சன்னதி அருகில் ஹோம குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் 1008 சங்குகளுக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சிவபெருமானுக்கு பூஜைகள், இரவு 2ம் கால அபிஷேக பூஜைகள் மற்றும் 1008 சங்காபிஷேகம், 3ம் கால அபிஷேக பூஜைகள், தொடர்ந்து இரவு 11 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதியுலா நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா சிவராத்திரியொட்டி இரவு முழுவதும் நடை திறந்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் சிவப்பெருமான் நடனம் அரங்கேற்றம் செய்த முதல் சபை ரத்தின சபை என்ற சிறப்பு பெற்ற, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து 4 கால சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. மாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து, 13 மணி நேரம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

 ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் சிவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது. தினமும் மரகதாம்பிகா சமேத வால்மீகேஸ்வரர் சாமிகளுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். முதல் நாளான 7ம் தேதி மூஷிக வாகனத்திலும், மறுநாள் சந்திர பிரபை வாகனத்திலும், பின்னர் அடுத்தடுத்த நாட்கள் காமதேனு வாகனத்திலும், பூதவாகனத்திலும், அதிகார நந்தி வாகனத்திலும், கஜவாகனத்திலும், அஸ்வ வாகனத்திலும், நேற்று ரிஷப வாகனத்திலும், கல்பவிருட்ச வாகனத்திலும் பெண்கள் கோலாட்டத்துடன் கோயிலை வலம் வந்தனர். இதில், கோயில் முதன்மை அர்ச்சகர் கார்த்திகேசன் சிவாச்சாரியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோயிலில் பக்தர்கள் கண்டுகளிக்க பரத நாட்டியம் நிகழ்ச்சியும், பாட்டு கச்சேரி நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சுருட்டப்பள்ளி கோயிலுக்கு ஊத்துக்கோட்டை, மாதவரம், பொன்னேரி போக்குவரத்து பனிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில் மகாசிவராத்திரி விழா நேற்று நடந்தது. இதையடுத்து ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி அம்பாளுக்கு கைலாசநாதர்-பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், 6,8 கால சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், புண்ணியகோட்டீஸ்வரர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், பிறவாதீஸ்வரர், இரவாதீஸ்வரர், நகரீஸ்வரர் மணிகண்டீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பணம் முடீஸ்வரர், அகத்தீஸ்வரர், லிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர், வேதபுரீஸ்வரர், குபேர லிங்கேஸ்வரர் என காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 127 சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி ஆறுகால பூஜைகள் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவுகள் நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தன. காலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர். மகாசிவராத்திரியை ஒட்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: