தமிழகத்திற்குள் இயக்கப்படும் கேரள பேருந்துகளில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை

பந்தலூர் : கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் கேரள அரசு பேருந்துகளில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை மற்றும், வயநாடு மாவட்டம் கல்பட்டா, சுல்தான்பத்தேரி, மானந்தவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழக எல்லைப்பகுதியான எருமாடு சேரம்பாடி, பாட்டவயல், பந்தலூர், தேவாலா, நாடுகாணி வழியாக கூடலூர், ஊட்டி, கோவை, கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு, சாலக்குடி பகுதிகளுக்கு கேரளா அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வயநாடு மற்றும் மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவம் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு சென்று வருகின்றனர். கேரளாவில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மலையாளம் மொழியில் மற்றும் பெயர் பலகைகள் வைத்துள்ளனர்.

இன்டர் எஸ்டேட் செல்லும் பேருந்துகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேருந்து செல்லும் இடம் குறித்து பெயர் பலகைகள் வைத்தால் மலையாளம் மொழி தெரியாதவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகைகள் வைக்காததால் பயணிகள் தடுமாறுகின்றனர்.

ஒரு சில நடத்துனர், ஓட்டுநர்களிடம் பேருந்து எங்கு செல்கிறது என்று கேட்டால் அதற்கு முறையான பதில் சொல்வதில்லை என பயணிகள் கூறுகின்றனர். எனவே, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ஊர் பெயர்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: