யுஜிசி., நிர்ணயித்த ஊதியம் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

ஊட்டி : பணி நிரந்தரம் மற்றும் யுஜிசி., நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க கோரி ஊட்டி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசி., நிர்ணயம் செய்த ரூ.57,800 ஊதியமாக வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாதம் சம்பளம் வழங்க வேண்டும்.

பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பிஎப்., மற்றும் இபிஎப்., ஆகியன பிடித்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஊட்டி கிளைத் தலைவர் சேவியர் இன்னாசிமுத்து முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: