*கோத்தகிரியில் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பேச்சு
கோத்தகிரி : பசுந்தேயிலை விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் தேயிலை விவசாயத்தில் அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரமான பசுந்தேயிலை சாகுபடி செய்வதன் மூலம் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் தெரிவித்தார்.
கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு கிராம சமுதாய கூடத்தில் இந்திய தேயிலை வாரியம் மற்றும் வேளாண் தொழில் நுட்ப நிறுவனமான அக்ரி போர்டல் ஆகியவற்றின் சார்பில் நேற்று காலை சிறு தேயிலை விவசாயிகளுக்கான டிஜிட்டல் மாற்றம் மற்றும் துல்லிய விவசாயம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் சுசாந்தா கர்மாகர், உபாசி பொது செயலாளர் சஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வியாபார அபிவிருத்தி இயக்குநர் வெங்கட்ராமன் ஆனந்த் வரவேற்றார். கூட்டத்தில் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி பியூஷ் குமார் பேசுகையில்,`சிறு தேயிலை விவசாயிகள் தேயிலை சாகுபடியில் டிஜிட்டல் கருவிகள் மற்றும் டிரோன்கள் பயன்படுத்துவது, வானிலை உணரிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பண்ணை செயல்பாடுகளை மேம்படுத்தி, அதிக மகசூல் பெறுவது மற்றும் தரத்தை உயர்த்துவதன் மூலம் உள்ளீட்டு செலவைக் குறைத்து ஒட்டுமொத்த லாபத்தை அதிகரிக்கலாம். இதனால், சிறு விவசாயிகள் பசுந்தேயிலைக்கு கூடுதல் கொள்முதல் பெற உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேயிலை விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த திட்டத்தை குன்னூரில் உள்ள தேயிலை வாரியத்தின் உதவியுடன் அக்ரி போர்டெல் கோத்தகிரி பகுதியில் முதற்கட்டமாக 2 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுடன் இணைந்து தேயிலைத் தோட்டங்களில் மகசூல் அதிகரிப்பு, பச்சை இலைகளின் தரத்தில் முன்னேற்றம், நோய் மேலாண்மைக்கு உதவுதல் மற்றும் பண்ணை நடவடிக்கைகளின் அதிகரித்த செயல்திறன் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த உள்ளது’ என்றார்.
இதனைத் தொடர்ந்து தேயிலை வாரிய செயல் இயக்குனர் பேசுகையில்,`நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் இருந்த தேயிலைத் தோட்டங்களின் பரப்பளவு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது.
இதற்குகடந்த பல வருடங்களாக நிலவி வரும் பசுந்தேயிலை விலை வீழ்ச்சியே முக்கிய காரணமாக உள்ளது. விலை வீழ்ச்சிக்கு அதன் தரமும் ஒரு காரணியாக உள்ளது. எனவே நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேயிலையின் தரத்தை உயர்த்தி, சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பெரிய தேயிலை எஸ்டேட் வைத்திருப்பவர்களுக்கு கிடைத்து வரும் அனைத்து பயன்களும் சிறு தேயிலை விவசாயிகளுக்கும் கிடைக்கும். முதற்கட்டமாக உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு செயல்படுத்தபடும் இந்த திட்டம், எதிர்காலத்தில் சிறு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும்.
தேயிலை வாரியத்தின் அறிவுரைகளின்படி தரமான தேயிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தரம் குறித்த சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை வாரியம் மாதந்தோறும் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச கொள்முதல் விலையை தர மறுக்கும் தொழிற்சாலைகள் மீது விவசாயிகள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கலப்பட தேயிலைத் தூள் தயாரிக்காமல் தடுக்க தேயிலை வாரிய அதிகாரிகள் தொடர்ந்து தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மீறி கலப்பட தேயிலைத் தூள் தயாரிப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.இந்த நிகழ்ச்சியில் கடக்கோடு பகுதியை சேர்ந்த தேயிலை விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். ஹாவுக்கல் எஸ்டேட் கார்த்திக் நன்றி கூறினார்.
