ரூ.1.50 லட்சம் பணம் கருகியது
ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கசாணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(45), கூலி தொழிலாளி, திருமணமாகவில்லை.இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தகர சீட்டால் மூடப்பட்ட ஓலை குடிசையில் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று ரமேஷ், நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
மதியம் 12.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதற்கிடையில் வீடு இருக்கும் திசையில் கரும்புகை வருவதை பார்த்த ரமேஷ் அங்கு சென்று பார்த்தபோது, தனது வீடு பற்றி எரிந்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் ரூ.1.50 லட்சம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களும் தீயில் கருகி முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து, தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட ரமேஷிற்கு அரிசி, பருப்பு மற்றும் வேட்டி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷின் வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக ரமேஷ் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
