மேல்மருவத்தூர், பிப்.24: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 86வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி சித்தர் பீட வளாகத்தில் கோடி அர்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக இயக்க துணைத் தலைவர் தேவி பங்காரு மற்றும் உலகெங்கும் உள்ள அமெரிக்கா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், துபாய், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஆஸ்திரியா, ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பக்தர்களும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சித்தர் சக்தி பீடங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள், தொண்டர்கள் நேரிலும், இணையத்திலும் 270 இடங்களில் ஒருங்கிணைந்து கலந்து கொண்டு குரு போற்றி மந்திரத்தை ஒரு கோடி முறைக்கும் மேலாக படித்து ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வினை கின்னஸ் சாதனை குழுவினர் பதிவு செய்து கொண்டனர். மேலும் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்ட செவ்வாடை பக்தர்களுக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பல்வேறு கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
