தீயணைப்பு துறைக்கு பெரும்பாக்கத்தில் 40 குடியிருப்புகள் திறப்பு தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு ரூ.55 கோடியில் புதிய கட்டிடப்பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தாம்பரம், பிப்.14: காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடியில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் ரூ.573.05 கோடி செலவில் 3,418 காவலர் குடியிருப்புகள், ரூ.73.65 கோடி செலவில் 56 காவல் நிலைய கட்டிடங்கள், ரூ.180.16 கோடி செலவில் 31 காவல்துறை இதர கட்டிடங்கள் மற்றும் ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து நேற்று, கடலூர் மாவட்டம் – கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் ரூ.49 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 179 காவலர் / தலைமைக் காவலர் குடியிருப்புகள், சென்னை மாவட்டம் – துறைமுகத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்ட காவல் நிலையம், ராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடியில் ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகர் காவல் நிலையம் மற்றும் தென்காசி மாவட்டம் – புளியரையில் ரூ.1 கோடியே 61 லட்சத்து 59 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;

சென்னை மாவட்டம் – கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் ரூ.14 கோடியே 31 லட்சத்து 28 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்கள் தங்கும் பாளையம் மற்றும் ஆலந்தூரில் ரூ.3 கோடியே 31 லட்சத்து 81 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்களின் குழந்தைகளை கல்வி மற்றும் விளையாட்டில் வழிநடத்த உடற்பயிற்சிகூடம், நூலகம் மற்றும் கல்வி மையம், மதுரை மாவட்டம் – மதுரை தல்லாகுளத்தில் ரூ.7 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி, கரூரில் ரூ.82 லட்சத்து 01 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை கட்டிடம் மற்றும் ரூ.90 லட்சத்து 72 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை கட்டிடம், தேனி மாவட்டம் – தேனி ஆயுதப்படை வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி என மொத்தம் ரூ.82 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் 40 குடியிருப்புகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 33 குடியிருப்புகள், சென்னை கிண்டி மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் 2 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தீயணைப்பு நிலையம் என மொத்தம் ரூ.35 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

2025ம் ஆண்டிற்கான மூன்று சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பைகளை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகளின் பயன்பாட்டிற்கென ரூ.27 கோடி செலவில் 300 புதிய நான்கு சக்கர வாகனங்களையும், மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடியே 92 லட்சம் செலவில் 60 புதிய வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தடய அறிவியல் துறை இயக்குநர் விசாலாட்சி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: