இசிஆரில் விதிமீறல் கட்டிடங்கள் மீதான நடவடிக்கை மேல் முறையீடுகளை மே 31க்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்

செங்கல்பட்டு, பிப்.21: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளை வரும் மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டப்பட்டுள்ள பங்களாக்கள், ரிசார்ட்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2018ம் ஆண்டு 798 கட்டிட உரிமையாளர்களுக்கு எதிராக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இந்த வழக்குகள், நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து 798 உரிமையாளர்களில் 440 பேர் அரசிடம் மேல்முறையீடு செய்திருந்ததாகவும், அதில் 84 மேல் முறையீடுகள் முடித்து வைக்கப்பட்டதாகவும், மீதமுள்ள மேல் முறையீடுகள் நிலுவையில் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீதமுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து கட்டிட உரிமையாளர்கள் தரப்பு விளக்கம் அளிக்க மார்ச் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி, விசாரணை நடத்தி வரும் மே 31ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: