கல்பாக்கம் அருகே நில பிரச்னை காரணமாக இரு மீனவ கிராமங்களிடையே கல்வீச்சு தாக்குதலால் பரபரப்பு: 7 பேர் காயம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே இரு மீனவ கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். இதில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிக்குப்பம் மீனவர் கிராமங்களுக்கிடையே கடந்த பல ஆண்டுகளாக நிலம் தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. இரு மீனவ கிராமங்களுக்கிடையே மோதல் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க திருக்கழுக்குன்றம் தாசில்தார் மற்றும் போலீசார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைக்குரிய இடத்தை இரு கிராம மக்களும் பயன்படுத்த கூடாது என்று அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு மீனவ கிராம பிரதிநிதிகளும் கையேப்பமிட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் நேற்று புதுப்பட்டினம் மீனவ கிராமத்தினர் சம்பந்தப்பட்ட பிரச்னைக்குரிய இடத்திற்கு செல்வதற்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு உய்யாலி குப்பம் மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. பதற்ற நிலையை தவிர்க்க உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தரப்பில் இரு கிராம பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதற்கிடையே இரு தரப்பினருக்கும் இடையேயான சிலர் அத்துமீறி ஒருவர் மீது ஒருவர் கல் எறிந்து மோதலில் ஈடுபட்டதால் இரு தரப்பிலும் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபில் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரின் மோதலை தடுத்து இரு தரப்பினரையும் கலைத்தனர். நிலம் தொடர்பான இந்த மோதலால் இரு மீனவ கிராமங்களுக்கிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: