சோழிங்கநல்லூர், பிப்.24: கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவருக்கு திருமணமாகி 19 மற்றும் 17 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இதில், 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார். இந்நிலையில், இந்த சிறுமி, நேற்று தனக்கு வயிறு வலிப்பதாக தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால், சிறுமியை அவரது தாய், எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஓட்டேரி பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபரை சிறுமி காதலித்ததும், எப்போதெல்லாம் அந்த நபரின் வீட்டில் ஆட்கள் இல்லையோ அப்போதெல்லாம் அந்த வாலிபர், சிறுமியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததும், இதில் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
