ராகுலின் தலைமையை ஏற்பவன் அல்ல!: ஓரங்கட்டப்பட்ட மணிசங்கர் அய்யர் மீண்டும் சர்ச்சை

புதுடெல்லி: எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை மாற்றம் தொடர்பாக மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் சில இழுபறி பிரச்னை நீடித்தது. இந்த சூழலில் நேற்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி இவர் கட்சியால் ஓரங்கட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் ‘இந்தியா’ கூட்டணியின் உண்மையான தலைவர். ராகுல் காந்தி தலைமை பொறுப்பில் இருந்து விலகி மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் அல்லது தேஜஸ்வி யாதவ் போன்ற மாநில தலைவர்களுக்கு வழிவிட வேண்டும். மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் இல்லை என்றால், ‘இந்தியா’ கூட்டணியின் அடையாளமே மறைந்துவிடும். நான் காந்தியம், நேரு மற்றும் ராஜீவ் காந்தியின் கொள்கைகளை பின்பற்றுபவன்; ஆனால் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்பவன் அல்ல’ என்றார். இக்கருத்தை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் தலைமை மீது கூட்டணிக்குள் நம்பிக்கையற்ற சூழல் நிலவுவதாக பாஜக விமர்சித்துள்ளது.

Related Stories: