மேற்குவங்க அரசியல் சாணக்கியரான ஒன்றிய மாஜி அமைச்சர் மரணம்: தலைவர்கள், ெதாண்டர்கள் இரங்கல்

கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலின் மூத்த தலைவரான முகுல் ராய் மாரடைப்பால் காலமானார். கடந்த 1998ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நிறுவிய முக்கிய தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், அம்மாநில அரசியலின் சாணக்கியர் என்று போற்றப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடிக்கத் தேவையான தேர்தல் யுக்திகளை வகுத்த இவர், 2012ம் ஆண்டு ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அந்த கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

மீண்டும் 2021ம் ஆண்டு தனது பழைய கட்சியில் இணைந்தார். இது தொடர்பாக நடந்த வழக்கில் 2025ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இவரது எம்எல்ஏ பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், கடந்த ஜனவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அந்த உத்தரவிற்குத் தடை விதித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரகக் கோளாறு மற்றும் மூளை நரம்புப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த முகுல் ராய் (71), இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரது மகன் சுப்ரான்சு ராய் பேசுகையில், ‘எனது தந்தை நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் எங்களைப் பிரிந்து சென்றார்’ என்றார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Related Stories: