ஐதராபாத்: ராஷ்மிகா மந்தனாவை காதல் திருமணம் செய்யும் விஜய் தேவரகொண்டா, முதல்முறையாக அதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவும், இந்திய திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தங்கள் காதலை பற்றி இதுவரை வெளிப்படையாக பேசியது இல்லை. எனினும், நாள்தோறும் இந்திய ஊடகங்களிலும், மீடியாவிலும் அவர்களது காதலை பற்றியும், திருமணத்தை பற்றியும் ஏதாவது ஒரு செய்தியும், தகவலும், கிசுகிசுக்களும் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அதை அவர்கள் எப்போதுமே மறுத்தது இல்லை.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மிகவும் ரகசியமாக, ஐதராபாத்திலுள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருவீட்டு பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இச்செய்தி வெளியான பிறகும் கூட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்கள் காதலை பற்றியும், திருமணம் நடக்க இருப்பது பற்றியும் வெளிப்படையாக பேசாமல் தவிர்த்து வந்தனர்.
இதையடுத்து வரும் 26ம் தேதி இருவருக்கும் திருமணம் என்ற தகவல் வெளியானது. எனினும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில், நேற்று இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்துள்ளனர்.
அதில், ‘நாங்கள் எந்தவொரு பிளான் செய்வதற்கு முன்பும், நாங்கள் எங்களுக்காக எதை தேர்ந்தெடுப்பதற்கும் முன்பும், நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்கு ‘VIROSH’ என்ற பெயரை கொடுத்தீர்கள். எங்களை அப்படி அழைத்தீர்கள். அதனால், இன்று நிறைந்த மனதுடன் உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம். அதற்கு ‘The Wedding of VIROSH’ என்று பெயரிட விரும்புகிறோம். உங்களுடைய அதீத அன்பால் எங்களை பற்றியிருப்பதற்கு நன்றி. எப்போதுமே நீங்கள் எங்களில் பாதி’ என்று குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம், வரும் 26ம் தேதி ராஜஸ்தான் உதய்பூரிலுள்ள அரண்மனையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடக்கிறது. இருவீட்டு பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகம் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் மட்டும் திருமண விழாவில் பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரும் திருமண நிகழ்ச்சிகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலோ அல்லது தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலோ பதிவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புது மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் 4ம் தேதி ஐதராபாத்திலுள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து சினிமாவில் நடிப்பார். மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து திரைப்படம், வெப்தொடர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
