சிறுவாணி அணை அருகே சிறுத்தை தாக்கி 7 ஆடுகள் பலி

பாலக்காடு : மன்னார்க்காடு தாலுகாவிற்கு உட்பட்ட சிறுவாணி அணை அருகே பாலக்கயம் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மேய்ச்சலில் ஈடுப்பட்ட 7 ஆடுகளை கடித்துக் குதறி கொன்றது.பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகாவிலிருந்து சிறுவாணி செல்கின்ற வழித்தடத்தில் பாலக்கயம் எனும் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் கூலி வேலை, தோட்டத்தொழில் மற்றும் சிலர் ஆடு, மாடுகளை வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவாணி வனப்பகுதியிலிருந்தும், பாலக்கயம் வனத்தில் இருந்தும் அவ்வவ்போது சிறுத்தை, வரையாடு, மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டுயானைகள் ஆகிய வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. கடந்த இரண்டு நாட்களாகவே அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதை தோட்டத்தொழிலாளர்கள் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.

பாலக்கயம் அடுத்த வாக்கோடனியில் வீட்டு தோட்டத்திற்குள் தங்கப்பணம் என்பவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, சிறுத்தை ஒன்று மேய்ச்சல் இடத்தில் புகுந்து 7 ஆடுகளை கடித்துக் குதறி கொன்றுவிட்டு, இரண்டு ஆடுகளின் உடல்களை கவ்வி இழுத்து காட்டிற்குள் சென்றது.

இதனைத்தொடர்ந்து கிராமப்பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் ஊர்மக்கள் ஒருங்கிணைந்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: