சென்னை: புரசைவாக்கம் பகுதியில் தனியாக வசித்து வந்த முதியவரை கத்தியால் குத்திக் கொன்று, நகைகளை கொள்ளையடித்த பீகார் இளைஞரை போலீசார் கைது செய்தனர். புரசைவாக்கம் அரசப்பா தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 2024ம் ஆண்டு இவரது மனைவி உஷா உயிரிழந்தார். குழந்தைகள் இல்லாததால், பாலகிருஷ்ணன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அவரது அண்ணன் மகன் விக்னேஷ் செல்போனில், பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால் இரவு 8.30 மணிக்கு நேரில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் கதவின் கீழ் இடைவெளியில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் பாலகிருஷ்ணன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அலறிய விக்னேஷ் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், விரைந்து வந்த வேப்பேரி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, பாலகிருஷ்ணன் உடலில் கத்தியால் பல இடங்களில் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், வீட்டை சோதனையிட்ட போது, பாலகிருஷ்ணன் வீட்டில் வைத்திருந்த 5 சவரன் நகைகளும், வெள்ளிப் பொருட்களும் திருடுபோனது தெரிந்தது. உடனடியாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார், ஆய்வு செய்தனர். அதில், இரவு நேரத்தில் ஒருவர் கையில் பையுடன் வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியேறுவது தெரிந்தது.
இதையடுத்து பாலகிருஷ்ணன் பணிபுரிந்த துணிக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அதே கடையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்த பீகாரை சேர்ந்த ஷாயம் மாத்தேவ் (35) என்பவரின் உருவம், சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்துடன் ஒத்துப்போனது. அவர் வேலைக்கு வராததால், உடனே அவர் தங்கியிருந்த அறைக்கு போலீசார் சென்றனர்.
அப்போது திருடிய 5 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன், மனைவியோடு பீகாருக்கு தப்பிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அவரை கைது செய்து, கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வேலை செய்த இடத்தில் பாலகிருஷ்ணனுடன் ஷாயம் மாத்தேவ் பழகி வந்துள்ளார். பாலகிருஷ்ணன் மனைவி இறந்த பின்னர் அவர் தனியே வசிப்பதை அறிந்து, தினமும் அவரது வீட்டிற்கு சென்று தேவையான உதவிகள் செய்து வந்துள்ளார். இருவரும் தினமும் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.
அப்போது, அவரது வீட்டில் நகை இருப்பதை அறிந்த ஷாயம் மாத்தேவ், அதை திருட நேரம் பார்த்து காத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்தியுள்ளனர். பாலகிருஷ்ணன் போதையில் மயங்கியதும், வீட்டில் இருந்த பீரோவை ஷாயம் மாத்தேவ் திறந்துள்ளார்.
சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் எழுந்து கூச்சலிட்டுள்ளார். இதனால், வெளியில் தெரிந்தால் பிரச்னை என கருதிய ஷாயம் மாத்தேவ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, பாலகிருஷ்ணனை பல இடங்களில் குத்தி கொலை செய்துவிட்டு, நகைகளை பையில் அடைத்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, கைதான ஷாயம் மாத்தேவிடம் வேப்பேரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
