கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடும் மோதல் வெடித்துள்ளது.அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பூபேன் குமார் போரா, தனக்கு ஏற்பட்ட அவமரியாதை காரணமாக கடந்த 16ம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு இடையே, அம்மாநிலத்தில் உள்ள 8 கட்சிகள் இணைந்த ‘அசாம் ஒருங்கிணைந்த முன்னணி’ இன்னும் செயல்பாட்டிற்கு வராமலேயே முடங்கிப் போய் உள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் மற்ற பிராந்திய கட்சிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே 7 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தின. இந்நிலையில் கவுகாத்தியில் நேற்று நடந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் ராய்ஜோர் தளம், அசாம் ஜாதிய பரிஷத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ் கட்சிக்கு, தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்க 2 நாட்கள் காலக்கெடு விதித்து ராய்ஜோர் தளத் தலைவர் அகில் கோகோய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிராந்திய கட்சிகள் தலா 15 தொகுதிகளை கோரும் நிலையில், காங்கிரஸ் 8 முதல் 9 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் 46 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக அகில் கோகோய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரியங்கா காந்தி அசாம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
