பார்ட்டிக்கு எஸ் எலக்‌ஷனுக்கு நோ: ஓபிஎஸ் கதை கதம்…கதம்; அவருக்காக தற்கொலையா செய்ய முடியும் என ஆவேசம்

திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக, பாமக, தேமுதிக என பயணித்து அதிமுகவில் ஐக்கியமானார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராகவும், அடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராகவும் இருந்தார். இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது 89வது வயதில் ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி அறிவிப்பு மற்றும் கட்சி கொடி அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. இதில் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். முன்னதாக பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

சமவாய்ப்புச் சமுதாயமே எங்கள் கழகத்தின் குறிக்கோள். இந்த கட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிடாது. நம்மில் சிலர் விரும்பினால் அவர்கள் நம்மோடு ஒத்த கருத்துகளுடைய அரசியல் கட்சி மூலம் அவர்களின் அனுமதியோடு அவர்களின் ஆதரவு பெற்று அவர்கள் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடலாம். இந்த பயணம் நீண்ட பயணம், இந்த நீண்ட பயணத்தில் தேர்தல்கள் ஒரு சடங்குகள் அவ்வளவுதான். தேவைப்பட்டால் அந்த சடங்குகளை செய்து கொள்ளலாம். ஆனால், அதுவேதான் அரசியல் என்று நாம் நினைப்போமானால் அதைவிட அறியாமை வேறு இல்லை.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்து விட்டது. அரசியல் என்பது ஒருவருக்காக அல்ல. அரசியல் என்பது மக்களுக்கானது. ஆகவே ஒருவர் என்ன ஆனார், என்பது முக்கியமல்ல. நாடு நாட்டு மக்கள் என்ன ஆகிறார்கள் என்பது முக்கியம். என்னைப் பொறுத்தவரை நாடு இன்று ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்திலே நாம் ஒரு நல்ல அரசியலை கொடுக்க வேண்டும். அதுதான் நம்முடைய கடமை. நாம் தனிப்பட்ட முறையில் ஒருவரோடு பழகுகிறோம் என்பதற்காக நம்முடைய வாழ்நாளை வீணாக்க முடியாது.

நம் நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. ஓ.பி.எஸ்சுக்காக நாம் உயிரைத் துறக்க முடியுமா, நம் வாழ்நாளை வீணாக்க முடியுமா, வாழ்நாள் போனால் வருமா? அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க. அவர் அவர்கள் ஒரு நிலைப்பாடு இருக்கிறார்கள். இருக்கட்டும். நான் யாரையும் குறை சொல்ல போவதில்லை. அவர்கள் சூழ்நிலையை பொறுத்து நிலைப்பாடு இருக்கிறார்கள். இந்த தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: