* நான்தான் மூத்தவன்; என் கூட வேணா விஜய்யை வர சொல்லுங்க… * பையர் மோடில் சீமான்
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? நான் வந்தால் இந்த முறைகளை ஒழிப்பேன். கடன்கார நாடாக, நமது நாட்டை மாற்ற விரும்பவில்லை. ஆட்சி முறையை மாற்றுவேன் என்று விஜய்யால் சொல்ல முடியுமா? குறைகளை சொல்வது சரி. அப்படியெனில் எது சரி? என்று சொல்ல தலைவன் தேவைப்படுகிறான். ஆட்சிக்கு வராத, தேர்தலில் நிற்காத ஒருவர், அழைக்கும் போது, நம்பிக்கைக்குரியதாக இருக்காது. விஜய்காந்த் தலைமையில், மக்கள் நலக்கூட்டணி உருவானது என்றால், 10 சதவீத வாக்கு இருந்தது.
என்னுடன் கூட்டணிக்கு வரக்கூடியவர்கள், எங்களின் கோட்பாடுகளை, கொள்கைகளை ஏற்க வேண்டும். அப்போது தான் சரியாக இருக்கும். சும்மா கூட்டத்தை சேர்த்து கொண்டு நிற்பதில்லை. விஜய், என்னை ஏன் கூட்டணிக்கு அழைக்க வேண்டும்? வயதில் என்னை விட, 8 வயது சின்னவர். எல்லாவற்றிலும் நான் தான் மூத்தவன். என்னுடன் தான், விஜய் வர வேண்டும். நான் விஜய்யின் தவெகவை எதிர்க்க கட்சி ஆரம்பிக்கவில்லை. நான் கட்சி ஆரம்பித்து, 15 ஆண்டுகள் கழித்து தான், விஜய் கட்சி ஆரம்பிக்கிறார். நான் பல தேர்தலில் நின்று அங்கீகாரம் பெற்ற பிறகே, விஜய் வருகிறார். அப்படிப்பட்ட தவெகவினர் தான், எங்களை எதிர்க்கிறார்கள்.
அண்ணா ஆரம்பித்த கட்சி ஸ்டாலினிடமும், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி எடப்பாடியிடம் இருக்கிறது. தனித்து கட்சி ஆரம்பித்தேன் என்று, சேலத்தில் விஜய் பேசியது, என்னுடைய வசனம். அது எப்படி பேசுவாரு. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சிகளை அழிப்பேன் என்று சொல்லி விட்டு, அவர்களை எடுத்து வருவது ஏன்? எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி ஊழல் கட்சி என்றால், அப்போ எம்ஜிஆர் யாரு? உங்களுக்காவது திரை பிம்பம் இருக்கு. ரசிகர்கள் கூட்டம் இருக்கு. நான் அப்படி இல்லை.
சாதாரண மகனாக வந்து நின்னு, நின்னு இன்று 36 லட்சம் வாக்குகளை பெற்று உள்ளேன். தனித்து என்று நீங்க சொல்லக்கூடாது. ஏன் என்றால் நீங்க தேர்தலையே இன்னும் சந்திக்கல. 2024லேயே நீங்க தேர்தல் பாஜவை எதிர்த்து போட்டியிட்டு இருக்கணும் விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நீங்கள் போட்டியிட்டு இருக்கணும். நான் போட்டியிட்டேனா இல்லையா? நீங்க போட்டியிட்டு இருக்கணும். இது என்னுடைய வசனம். விஜய் பேசக்கூடாது. யாரோ எழுதி தருவதை, பேசி சென்று விட கூடாது. பேசினால் கேள்விகள் வரும். இவ்வாறு சீமான் கூறினார்.
* தாமரையால் சந்தி சிரித்த ‘குபேர பூஜை’
தாமரை கட்சியினர் தேர்தல் வரும் நேரத்தில் எதையாவது செய்து அவர்கள் விரித்த வலையில் அவர்களே மாட்டிக் கொள்கின்றனர். இந்தக் கூத்து முத்துக்கு பெயர் போன மாவட்டத்தில் நடந்துள்ளது. அதாவது இவர்கள், முதலில் உடன்குடியில் குபேர பூஜை திருவிழா நடத்தினர். கோயிலில் நடக்கும் 4 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜைக்கு நடிகை நிக்கி கல்ராணியை அழைத்து வந்து துவக்கி வைக்க ஏற்பாடு செய்தனர். அது மட்டுமல்லாது இதில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி குலுக்கல் முறையில் தங்க நாணயம், டிவி, தையல் மிஷின் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினர். அடுத்து திருச்செந்தூரிலும் இதே குபேர பூஜையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாம்.
அந்த நிகழ்ச்சிக்கு சற்றும் குறையாமல் நடிகைகள் சீதா, நிரோஷா ஆகியோரை அழைத்து வந்து பெண்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கினராம். ஆனால் இதில் தான் தேசிய கட்சியினரின் உள்குத்து வெளிப்பட்டது. அந்த கட்சியின் எதிர் கோஷ்டியினர் சிலர் போலியாக டோக்கன்களை அடித்து விநியோகித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கி விட்டனராம். இதனால் பரிசுப் பொருள் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பூஜைக்கு வந்தவர்கள் மலராத கட்சி நிர்வாகிகளை அர்ச்சனை செய்து விட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார், கரும்பு போன்றவற்றை எடுத்துச் சென்று விட்டனராம். முதலிலேயே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பூஜை வெறிச்சோடி விட்டதாம். தேசிய கட்சியில் நடந்த இந்த உள்குத்து விஷயம் ஆறுமுகநேரி போலீஸ் வரைக்கும் புகாராகப் போயுள்ளதாம். தேர்தல் அறிவிக்கும் முன்பே மலராத தேசிய கட்சிக்குள் இத்தனை குழப்பமா, இப்படி முதுகில் குத்தினால் என்ன செய்வது என திகைத்து நிற்கின்றனராம் தேசிய கட்சியின் அப்பாவி தொண்டர்கள்.
