மேற்குவங்க எஸ்ஐஆர் பணி தமிழ் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக போர்க்கொடி

மேற்கு வங்க எஸ்ஐஆர் பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது. அங்கு எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட மேற்குவங்க கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கெடுபிடிகளால் அனைத்து அரசியல் கட்சிகளும் கதிகலங்கிப்போய் உள்ளன. அவரது உத்தரவுக்கு மேற்குவங்க தேர்தல் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வண்ணம் உள்ளனர்.

எஸ்ஐஆர் பணியில் சிறப்பு செயல்முறையின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றத் தவறியதற்காக, ஏராளமான தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சி.முருகன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். எஸ்ஐஆர் விசாரணை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகும், கிட்டத்தட்ட 1,15,000 ஆவணங்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை. இந்தக் காரணங்களைக் காரணம் காட்டி, தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

சிறப்பு தேர்தல் பார்வையாளர் சி.முருகன், வாட்ஸ்அப் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், சி. முருகன் ஐஏஎஸ் எந்தவொரு உத்தரவுகளையும் தனியாக பிறப்பிக்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை மட்டுமே விளக்கியுள்ளார் என்றும் தெளிவுபடுத்தினார். ஆனால் சி.முருகன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் போர்க்கொடி தூக்கி உள்ளது.

* பாஜ அழைப்பு: மக்கள் நிராகரிப்பு
2026 மேற்கு வங்க தேர்தல் அறிக்கைக்கு உரிய பரிந்துரைகளை வழங்கும்படி பா.ஜ கோரிக்கை விடுத்தது. தற்போது வரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள், விவசாயிகள், பெங்காலி புலம்பெயர்ந்தோர் மற்றும் பலர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பரிந்துரைகளை பா.ஜ கேட்டுள்ளது. ஆனால் மக்கள் உரிய பதில் வழங்காததால் பா.ஜ தேர்தல் குழு சோர்ந்து போய் உள்ளது. மேற்கு வங்க பா.ஜ மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ‘உங்கள் குரல் முக்கியமானது. உங்கள் பரிந்துரைகள் முக்கியம். ஏனெனில் மேற்கு வங்கத்தின் எதிர்காலம் முக்கியமானது. இப்போது வரை 2.5 லட்சம் பரிந்துரைகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன, பிப்ரவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் அதிகமான பரிந்துரைகளை எதிர்பார்க்கிறோம். தயவு செய்து பரிந்துரை கொடுங்கள்’ என்று கெஞ்சியுள்ளார்.

Related Stories: