புதுச்சேரியில் ஸ்பீக்கரை தூக்க காக்கி ரெடி

புதுச்சேரி நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சிட்டிங் பிரதிநிதியும், துணை சபாநாயகருமான ராஜவேலுவை எதிர்த்து போலீஸ் அதிகாரி களமிறங்குவது உறுதியாகி உள்ளது. புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்தவர் இளங்கோ. இத்தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஏற்கனவே புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களில் உள்ள முக்கியமான சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றி உள்ளார். கடைசியாக ஏனாம் பிராந்தியத்திற்கு இளங்கோ பந்தாடப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் ராஜவேலு இருந்ததாக காக்கிகள் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன. இதனால் ஏனாம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களிலே விருப்ப ஓய்வு மனுவை அளித்த இளங்கோ, கடந்த 3 மாதமாக நெட்டப்பாக்கம் தொகுதியிலேயே முகாமிட்டுள்ளார்.

அத்தோடு வரும் பொதுத்தேர்தலில் நெட்டப்பாக்கம் தனி தொகுதியில் ராஜவேலுவை எதிர்த்து போட்டியிடுவதை அவர் உறுதி செய்து வருகிறார். இதற்காக தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைகள் சிலரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைந்து, ராஜவேலுவை எதிர்த்து கண்டிப்பாக களம் காண்பது உறுதி என தனது சகாக்களிடம் அடித்துக் கூறுகிறாராம் இளங்கோ. அவரது இந்த செயல்பாடு விக்ரம் நடித்த சாமி திரைப்பட காட்சிகளை பிரதிபலிக்கிறதாம். ஏற்கனவே காக்கிகள் வரிசையில் இடம்பெற்றிருந்த பைரவசாமி (ஏனாம்), செல்வராஜ் (ஊசுடு-தனி), ஏகேடி ஆறுமுகம் (இந்திரா நகர்), சாய் சரவணன் குமார் (ஊசுடு-தனி) ஆகியோர் தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளனர். இதில் சாய் அமைச்சராகவும், ஏகேடி ஆறுமுகம் அரசு கொறடாவாகவும் பதவிகளை அலங்கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* அசாம் வேட்பாளர் பட்டியல் ரெடி பிரியங்கா அதிரடி
அசாம் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. முதல்பட்டியல் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்பட உள்ளது. அசாம் மாநில தேர்தல் பொறுப்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 80 காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட், ரைஜோர் தளம், அசாம் ஜாதிய பரிஷத் (ஏஜேபி), இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ(எம்எல்) விடுதலை, ஜாதிய தளம்-அசோம் (ஜேடிஏ) மற்றும் கர்பி அங்லாங்கை தளமாகக் கொண்ட அனைத்துக் கட்சி மலைத் தலைவர்கள் மாநாடு (ஏபிஎச்எல்சி) ஆகிய கட்சிகள் உள்ளன. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தலா 12 இடங்களில் ராய்ஜோர் தளம் மற்றும் அசாம் ஜாதிய பரிஷத் , தலா ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அனைத்துக் கட்சி மலையகத் தலைவர்கள் மாநாடு ஆகிய கட்சிகள் போட்டியிடும். மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிகிறது.

* ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீத வாக்கு; அசாம் பாஜவுக்கு நிதின் நபின் இலக்கு
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்று பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின் அசாமில் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். 2 நாள் அசாம் பயணமாக அசாம் சென்றுள்ள நிதின் நபின் கூறுகையில்,’நாங்கள் ஹாட்ரிக் வெற்றியைப் பெற இங்கு வந்துள்ளோம். ஆனால் ஒரு எளிய வெற்றியில் நான் திருப்தி அடையவில்லை. நான் உங்களுக்கு ஒரு இலக்கைத் தருகிறேன். அனைத்து பூத்களிலிருந்தும் 50 சதவீத வாக்குகளைக் கொண்டு வாருங்கள். இது காங்கிரஸ் படகை என்றென்றும் மூழ்கடிக்கும்’ என்றார்.

* கேரளாவில் பிப்.25க்குள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் தீவிரம்
கேரளாவில் வழக்கமாக காங்கிரஸ் கட்சியில் தான் வேட்பாளர் பட்டியல் கடைசியாக வெளியாகும். எல்லா கோஷ்டிகளையும் திருப்திப்படுத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்குள் மற்ற அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடுவார்கள். ஆனால் இம்முறை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆலோசனைகள் தொடங்கப்பட்டு விட்டன. இதன் பலனாக வரும் 25ம் தேதிக்குள் குறைந்தது 30 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கைவசம் இருக்கும் தொகுதிகள் மற்றும் பிரச்சனை இல்லாத தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது எம்பியாக இருப்பவர்கள் யாருக்கும் சீட் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கே. சுதாகரன், கே.சி. வேணுகோபால், அடூர் பிரகாஷ் உள்பட சிலர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.

* காங்கிரசில் இருந்து விலக ரூ.50 கோடி கொடுத்தாரா அசாம் முதல்வர்?
அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபன்போரா வரும் 22ம் தேதி பாஜவில் இணைகிறார். அசாம் தேர்தலில் வெற்றி பெற காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியாக ரூ.50 கோடி கொடுத்து பூபன்போராவை விலைக்கு வாங்கி விட்டார் அசாம் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி பூபன் போரா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் அவமானப்படுத்தப்பட்டதால் தான் விலகினேன். இதுபற்றி ராகுல் காந்தியிடம் சொன்னேன். பதிலுக்கு அவர் என்னிடம் நானும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். பிறகு எனது அவமானத்திற்கு என்ன மதிப்பு? பா.ஜவில் சேர முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் இருந்து ரூ.50 கோடி வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் கூறியுள்ளார். ​​

அந்தப் பணத்தை வழங்கினால், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அதை எடுத்துச் செல்வேன். என் தந்தைக்கு ஒரு மைதானம் கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தபோதும் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. அவர் 2019ல் இறந்தார். ஆனால் ஒரு அதிநவீன அரங்கம் கட்ட, ரூ.50 கோடி போதாது. நான் பிரியங்காவுடன் இணைக்கமாக இருப்பதால் அனைத்து தகவலும் அவருக்கு தெரிவிக்கப்படும் என்பதால் பயந்து என்னை கவுரவ் கோகாய் அவமானப்படுத்தி இருக்கலாம். இவ்வாறு கூறினார்.

Related Stories: