*தேவையான மருத்துவர்கள் நியமித்து அடிப்படை வசதி ஏற்படுத்த கோரிக்கை
பந்தலூர் : பந்தலூரில் பழமையான கட்டிடத்தில் இயங்கும் அரசு தலைமை மருத்துவமனை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், தேவையான மருத்துவர்களை நியமித்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஒரு தாலுகாவாக 1998ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின், பந்தலூர் அரசு தலைமை மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது.
பந்தலூர், மேங்கோரேஞ்ச், சேரங்கோடு, சேரம்பாடி, எருமாடு, தாளூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, உப்பட்டி, அத்திக்குன்னா, பொன்னானி, குந்தலாடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் ஏழை, எளிய தோட்டத்தொழிலாளர்கள், பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த மருத்துவமனையில் பொது மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை, பிரசவம், குழந்தை நலம் உள்ளிட்ட அடிப்படை சிகிச்சைகளை பெறுவதற்காக வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை ஆரம்ப கால கட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில்தான் இன்னமும் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனை கட்டிடங்கள் அனைத்தும் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கட்டிடங்களில் அதிக பழுது காணப்படுகிறது. மழைக்காலங்களில் கட்டிடங்களின் கூரை வழியாக தண்ணீர் ஒழுகுகிறது. கழிப்பிடங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளன.
குறிப்பாக, மழைக்காலத்தில் பிரசவ வார்டில் மழைநீர் புகுந்த சேறுபோல மாறிவிடுகிறது. கட்டிடங்களின் சுவர்களில் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.
போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது, அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதால் முறையான சிகிச்சை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால், சில நோயாளிகள் ஊட்டி அல்லது கேரள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனையை மேம்படுத்தவேண்டும் என பொதுமக்கள், சமூக அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பேரில், தமிழ்நாடு அரசு சார்பில் 2023ம் ஆண்டு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தவும் ரூ.5.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தாய் சேய் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு கட்டிடங்கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு 2024ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து கட்டிட பணிகள் செய்வதற்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்கி இருந்த குடியிருப்பு கட்டிடங்கள் உடைக்கப்பட்டன.
புதிய கட்டிடத்துக்கு அடித்தளம் அமைப்பதற்கு குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் கட்டிடம் கட்ட முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2025ம் ஆண்டு கட்டிட பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி திட்டதை அரசு ரத்து செய்தது. இதனால் பந்தலூர் பகுதி மக்களுக்கு கிடைக்க இருந்த தாய்-சேய் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவு உள்ளிட்ட மருத்துவ வசதிகள் கிடைக்காமல் போனது.
இது சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. பந்தலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு பழமையானதாக இருந்தது. இதனை புதுப்பிக்க அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது. அந்த பணியும் தொய்வாகவே நடைபெற்று வருகிறது. இங்குள்ள எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்து கொண்டு செல்லப்பட்டது. ஆனால், புதிதாக எக்ஸ்ரே இயந்திரமும் இதுவரை வழங்கப்படவில்லை.
கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு காலகட்டத்தில் மருத்துவமனை வளர்ச்சி குழு தலைவராக இருந்து வந்த எல்பிஎப் மாவட்ட கவுன்சில் தலைவர் டி.கே.மாடசாமி கூறுகையில்: ‘‘அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக சித்தா பிரிவு கொண்டு வரப்பட்டது.
பந்தலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை இல்லாமல் இருந்து வந்தது. தற்கொலை மற்றும் விபத்துகளில் இறப்பவர்களை உடல் கூராய்வு செய்வதற்கு கடந்த காலங்களில் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது இருந்தது.
ஆனால், அதன்பின்னர் பிணவறை கட்டிடம் கட்டப்பட்டு, பிரேத பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் பல அடிப்படை வசதிகளை செய்து பந்தலூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.
சமூக ஆர்வலரும், பந்தலூர், கூடலூர் அரசு மருத்துவமனைகளில் அறுவையர் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான கந்தசாமி கூறுகையில்: ‘‘பந்தலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் போதிய மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு, செவிலியர்கள், செவிலியர் உதவியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் இருப்பதில்லை. செவிலியர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். விவரமானவர்கள் சென்றால் மருத்துவர்களை அழைக்கின்றார்கள். அதனால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.
