*கூடலூர் அருகே பரபரப்பு
கூடலூர் : சேலார் மின் வேலி அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூடலூர் அருகே வன அலுவலரை விவசாயிகள், பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் விவசாய பயிர்களைத் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.
யானைகள் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழும் சூழல் உருவாகியுள்ளது. காட்டு யானைகள் உள்ளே வருவதை தடுக்க அகழி அமைத்து அதனை ஒட்டி மின்வேலி அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது வனத்துறை சார்பில் தொரப்பள்ளி முதல் போஸ்பாரா, செம்பக் கொல்லி வழியாக உள்ள பழைய அகழிகளை சீரமைக்கும் பணிகளும், புதிதாக அகழி அமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகள் தங்களது பயிர்கள் மற்றும் உடைமைகளை பாதுகாக்க வனப்பகுதியை ஒட்டிய கிராம எல்லைப் பகுதிகளில், காட்டு யானைகள் உள்ளே வருவதை தடுக்க கிராம மக்கள் சார்பில் சூரிய ஒளி(சோலார்) மின்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து விவசாயிகள், பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோலார் மின்வேலி அமைக்கும் பணியை தொடங்கினர். 75 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், வனத்துறையினர் பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் இந்த நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஸ்ரீ மதுரை பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பாக முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, தாசில்தார் முத்துமாரி, டிஎஸ்பி வசந்தகுமார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரீ மதுரை மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சி.கே. மணி தலைமையில் முன்னாள் கவுன்சிலர்கள் கங்காதரன்,பாபு, பழங்குடியின பெண் பீனா மற்றும் சன்னி, ஐசனோவர், அருள் ஆகியோர் பொதுமக்கள் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
‘‘வனவிலங்குகளிடமிருந்து தங்களது விவசாயப் பயிர்கள் மற்றும் உயிர் உடமைகளை பாதுகாக்க பொதுமக்களே முன்வந்து சோலார் மின் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
பாரம்பரியமாக இப்பகுதிகளில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் மக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தாங்களாகவே முன்வந்து மக்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
எனவே பணிகளைத் தடுப்பதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறையினர் முன்வர வேண்டும்’’ என்று கிராம மக்கள் கூறினர். இந்த பிரச்னை தொடர்பாக கூடலூர் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
