*கிராம மக்கள் கோரிக்கை
முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் கோரையாறு ஓரம் செல்லும் தர்கா சாலையில் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கைவைத்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் பாலத்திலிருந்து பிரிந்து கோரையாறு கரையோரம் ஜாம்புவானோடை தர்காவிற்கு செல்லும் சாலையானது ஒரு முக்கிய சாலையாகும்.
ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு ஆகிய சுற்றுபகுதி கிராம மக்களுக்கும் ஒரு முக்கிய சாலையாகும். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் ஒருபுறம் கோரையாறு, மறுபுறம் பாசன வாய்க்கால் செல்வதால் சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி சாலை சேதமாகிறது. தற்போது சாலையின் நெடுவெங்கும் பல்லாங்குழி போன்று போக்குவரத்துக்கு லாயக்கற்றநிலை உள்ளது. அதனால் சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் ஏறிஇறங்கி செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
இதனால் சாலை இருபுறமும் அரிப்பு ஏற்ப்படாத வகையில் தடுப்புச்சுவர் கட்டித்தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் தடுப்புச்சுவர் கட்டப்படாததால் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொண்டாலும் அடுத்த சில நாட்களின் அந்த சாலை சேதமாகிவிடுகிறது.
சமீபத்தில் இந்த சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் சாலை சேதமாகி பழைய நிலைக்கே வந்துவிட்டது. இதனால் சைக்கிள் மற்றும் பைக் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி ஒருபுறம் கோரையாறு மறுபுறம் வாய்க்கள் பகுதியில் தவறி விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் சொந்த கிராமங்களுக்கு செல்பவர்களும் தர்காவிற்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களும் சிறுவர் பெரியவர்களும் நிலை தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். அதேபோல் இவ்வழியில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், விவசாய பணிக்கு செல்லும் விவசாயிகள், மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஆகவே வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் நலன் கருதி தற்பொழுது மண் அரிப்பு ஏற்பட்டு சேதமான சாலையை சீரமைத்து தரவேண்டும். அதேபோல் வருங்காலத்தில் சாலை இருபுறமும் தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சாலை நெடுவேங்கும் கருவை மரங்கள் செடி கொடிகள் சாலையை மறைத்து மண்டிக்கிடக்கிறது.
இதனால் கொடிய பாம்புகள் விஷஜந்துக்கள் ஊடுருவி வருகிறது.இந்தப் பகுதியில் மது அருந்துவது, கஞ்சா வியாபாரம், பாலியல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும் தர்கா பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
