தர்மபுரியில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி அடாவடி கட்டணம் வசூல் 13 ஆட்டோக்கள் பறிமுதல்

*வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி

தர்மபுரி : தர்மபுரியில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி அடாவடி கட்டணம் வசூல் செய்த 13 ஆட்டோக்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.தர்மபுரியில் புதிதாக பஸ் நிலையம் கடந்த 5ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இதையொட்டி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் வழித்தடத்தில் பொதுமக்களின் அதிக போக்குவரத்து உள்ளதால், அதை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ்க்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் மேற்பார்வையில், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் வந்த ஆட்டோக்களை அதிரடி சோதனை செய்தார். இதில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி அடாவடி கட்டணம் வசூல் மற்றும் இதர குற்றங்களுக்காக 13 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தினார்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறியதாவது: ஏற்கனவே தர்மபுரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டம் போட்டு கட்டணங்கள் வசூலிப்பு மற்றும் விதிமுறைகள் கடைபிடிக்கக்கோரி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி, அடாவடி கட்டணம் வசூல் செய்த 13 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவை ஓட்டியவர்கள், தர்மபுரியை விட்டு வெளியே ஓட்டிக்கொண்டிருந்தவர்கள்.

புதிய பஸ் நிலையம் திறந்த பின்னர், உரிய அனுமதி இல்லாமல் அதிக கட்டணங்கள் வசூலித்துள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதிக கட்டணங்கள் வசூலிப்பது, தகுதி சான்று இல்லாமல் இயக்குவது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: