இளம் வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

*அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

ஊட்டி : வரும் சட்டமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்களிடையே, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தேர்தல் அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில், அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, எதிர்வரும் சட்டமன்ற பொதுதேர்தல் 2026ஐ முன்னிட்டு, அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இளம் வாக்காளர்களிடையே, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

புதிய வாக்குச்சாவடிகள் மற்றும் மாதிரி வாக்குச்சாவடிகள் குறித்தும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்த வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு போதுமான பயிற்சி வகுப்புகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடும் பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)அபிலாஷா கௌர், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி மற்றும் பொறுப்பு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: