மதுரை: தனிமனித விமர்சனம் எவ்வாறு நீதிமன்ற அவமதிப்பாகும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாமாக முன்வந்து எடுத்தார். பின்னர் இந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிவாளர் தரப்பில், ‘‘நீதிபதி சாதி அடிப்படையில் ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்குவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பொதுவெளியில் பேசியிருக்கிறார். அது சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களில் பகிரப்பட்டு உள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்’’ என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘அவர் என்ன பேசினார்? தனி நீதிபதி குறித்து பேசினாரா? இல்லை, நீதித்துறையின் மீதான விமர்சனங்களை வைத்தாரா? இல்லை, ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறாரா? சர்ச்சைக்குரிய அவரின் பேச்சு என்ன?’’ என்றனர். மேலும், ‘‘அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதும், அது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கள் முன்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.
அவர் அவ்வாறு என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவரின் அவதூறு பேச்சு தனிநபருக்கு எதிரானதா அல்லது நீதித்துறைக்கு எதிரானதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எதையும் பார்க்காமல் போதிய ஆவணங்கள் இல்லாமல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க இயலுமா? நாங்கள் நீதிபதிகள் என்றாலும் முதலில் இந்திய குடிமகன்கள் தான். எங்களது பணியின் அடிப்படையிலேயே நீதிபதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறோம்.
ஆகையால் தனிமனித விமர்சனம் செய்திருந்தால் அது எவ்வாறு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும்?’’ என கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியதாக கூறப்படும் பேச்சின் குறிப்புடன் அது தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 2க்கு தள்ளி வைத்தனர்.
