39 தொகுதிகளை கொண்ட உத்தேச பட்டியலை தயார் செய்த காங்கிரஸ்: கிரிஷ் சோடங்கர் தலைமையில் தீவிர ஆலோசனை

 

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது பற்றி மூத்த நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், மேலிட தலைவர்கள் ஒருங்கிணைந்து விவாதித்து 39 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலை தயார் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த பட்டியலில், கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம், ஸ்ரீ வைகுண்டம், விருதுநகர், ஆலங்குளம், தென்காசி, காரைக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், நாங்குநேரி, திருநெல்வேலி, ஊத்தங்கரை, மணப்பாறை, முசிறி, சோளிங்கர், அம்பத்தூர், ஸ்ரீ பெரும்புதூர், பொன்னேரி, மயிலாடுதுறை, கூடலூர், கும்பகோணம், சிதம்பரம், வேடசந்தூர், மொடக்குறிச்சி, மதுரை மத்தி, திருப்பூர் தெற்கு, கோவை தெற்கு, மதுராந்தகம், கலசப்பாக்கம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மேட்டூர், வேளச்சேரி, ஊட்டி, சிவகாசி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தொகுதிகளில் இருந்து 28 தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த உத்தேச பட்டியல் அதிகாரப்பூர்வ பட்டியல் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, திமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சு வார்த்தைக் குழு தலைவரும், மேலிட பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், காங்கிரசுக்கான 28 தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிட்டிங் தொகுதிகளில் எந்த தொகுதிகளை விட்டு கொடுப்பது, அதற்கு பதிலாக எந்த தொகுதிகளை கேட்டு வாங்குவது குறித்தும் கிரிஷ் சோடங்கர் கருத்து கேட்டார். மேலும் காங்கிரசுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

Related Stories: