‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தை போன்று ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த செங்கல்பட்டு வாலிபரை உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள்: 12 மணி நேரம் நடந்த மீட்பு பணி; எம்பி, கலெக்டர், கமிஷனர் நடவடிக்கை

கூடலூர்: ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தில் கொடைக்கானல் ‘குணா’ குகை பாறை இடுக்கில் விழுந்த நண்பனை காப்பாற்ற காவல்துறை மற்றும் வனத்துறையினர் மற்ற நண்பர்கள் உதவி கேட்பார்கள். ஆனால், அவர்கள் பாறை இடுக்கில் விழுந்த நபர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்ற கைவிரிப்பார்கள். ஆனால், நண்பர்கள் நம்பிக்கையுடன் விடமுயற்சியால் பல மணிநேரம் போராடி நண்பனை காப்பாற்றிய த்ரில்லர் மற்றும் உருக்கமான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை போன்று நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சிவகுருநாதன் (28). வியாபாரி. இவர், கடந்த 13ம் தேதி ஊட்டிக்கு தனியே சுற்றுலா வந்தார். விடுதியில் தங்கிய இவருக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்த வாடகை காரில் பல சுற்றுலா தலங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தார். நேற்று முன்தினம் விடுதியை காலி செய்த சிவகுருநாதன் கூடலூரில் உள்ள ஊசிமலை பகுதிக்கு செல்ல ஏற்கனவே பயணித்த வாடகை காரின் டிரைவரான ராஜசேகரை அழைத்துள்ளார். அவருக்கு வாடகை இருந்ததால் வேறு கார் ஏற்பாடு செய்தார்.

அந்த காரில் ஊசி மலை பகுதிக்கு மதியம் சுமார் 12 மணிக்கு வந்த சிவகுருநாதன் வாடகை காரை திருப்பி அனுப்பினார். பின்னர், ஊசிமலை காட்சி முனைக்கு சென்றார். அதன்பின், டாக்சி டிரைவர் ராஜசேகருக்கு சிவகுருநாதன் போன் செய்தார். அதில் செல்பி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டதாகவும், இடுப்பில் அடிபட்டுள்ளதால் தன்னால் நகர கூட முடியவில்லை என்றும் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த டாக்சி டிரைவர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், நடுவட்டம் இன்ஸ்பெக்டர் ராஜதுரை, தீயணைப்புத் துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து சிவகுரு நாதனை ராட்சத மின் விளக்கு உதவியுடன் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இருப்பினும், கிடுகிடு சரிவுகள் நிறைந்த பள்ளமான பகுதி என்பதால் மீட்பு பணிகள் தாமதம் அடைந்தன. அதிகம் இருட்டத் துவங்கியதால் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, சிவகுருநாதனுக்கு வனத்துறையினர் தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கி பாதுகாப்பாக நின்றனர். இதுகுறித்து நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் வெலிங்டன் ராணுவ மையத்தினை தொடர்பு கொண்டு மீட்பு பணியில் உதவிடும்படி கேட்டார். அதன்படி, மீட்பு படை மருத்துவர் மேஜர் சரவணகுமார் தலைமையில் ராணுவ மருத்துவ மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு இரவு 8.30 மணியளவில் வந்து சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிவகுருநாதன் விழுந்து கிடந்த இடத்திற்கு கயிறு கட்டி சென்ற ராணுவ மருத்துவ குழுவினர் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, எஸ்பி நிஷா ஆகியோரும் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மீட்பு பணிகள் முடியும் வரை அங்கேயே இருந்தனர். இதனையடுத்து 12 மணி நேர போராட்டத்திற்கு பின் நேற்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் சிவகுருநாதனை ஸ்டெச்சரில் கிடத்தி மீட்பு குழுவினர் காட்சி முனை வரை தூக்கி வந்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலை மற்றும் கை, கால்களில் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டவர் நல்ல உணர்வுடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிவகுருநாதன் தற்போது ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகுருநாதனிடம் போலீசார் விசாரணை செய்த போது பாறையில் இறங்கி செல்பி எடுத்த போது, ஏதோ ஒன்று தள்ளிவிட்டது போல் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். தவறி விழுந்தபோது செல்போன் எப்படி உடையாமல் இருந்தது போன்ற கேள்விகளை போலீசார் எழுப்பி வருகிறார்கள். தற்கொலைக்கு முயன்று பள்ளத்தில் சிக்கினாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: