புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு உபியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி பைக்கில் அழைத்துச் சென்ற 2 வாலிபர்கள், மறைவிடத்தில் சிறுமியை அழைத்துச் சென்று அவரது மார்பை பிடித்து, பைஜாமா நாடாவை இழுத்துள்ளனர். இதனால் சிறுமி பயத்தில் அலறியதும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்ததால் 2 வாலிபர்கள் தப்பி ஓடினர். இதுதொடர்பான புகாரின் பேரில் 2 வாலிபர்கள் மீது பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா கடந்த ஆண்டு மார்ச் 17ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘‘நடந்தது பலாத்கார முயற்சி ஆகாது ’’ என்றார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த தீர்ப்பை விசாரணைக்கு ஏற்று இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், ‘‘மார்பகங்களை பிடிப்பதும், ஆடையின் நாடாவை இழுப்பதும் பலாத்கார முயற்சி. இது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது எனக் கூறிய அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவியல் நீதித்துறையின் கொள்கைகளின் வெளிப்படையான தவறான பயன்பாடு காரணமாக வழங்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்கிறோம். எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டப்பிரிவு 376ன் கீழ், குற்றத்தை செய்ய முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நோக்கத்துடன் செயல்பட்டார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய வழக்கு இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என உத்தரவிட்டுள்ளது.
