* காஞ்சிபுரத்திலுள்ள கச்சபேஸ்வரம் ஆலயத்தின் முருங்கை மரத்தின் நிழலில் ஜோதிலிங்கமாக எழுந்தருளி இருக்கும் கச்சபேஸ்வரரை சூரியன் தேவ வடிவமாக வழிபட்டு பேறு பெற்றதாக கூறப்படுகிறது. இங்கு சூரிய தேவன் ஒரு தீர்த்தக் குளம் அமைத்து பெருமானுடன் இஷ்ட சித்தீஸ்வரர், ஞான சித்தீஸ்வரர், யோக சித்தீஸ்வரர், தர்ம சித்தீஸ்வரர், வேத சித்தீஸ்வரர் ஆகிய லிங்கங்களை வைத்து வழிபட்டு வந்ததாக புராணம் கூறுகிறது.
* தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பருத்தியப்பர் ஆலயம். தாங்க முடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன், குளிர்ச்சியுடன் திகழ சித்திரை மாதப் பவுர்ணமி நாளில் மணலைக் கூட்டி சிவலிங்கம் செய்து வழிபட்ட ஸ்தலம் இது. இங்கு எழுந்தருளிய ஈசனின் கருவறைக்கு முன் அமைந்துள்ள நந்தி பலிபீடத்துக்குப் பின்புறம் சூரிய தேவன் மூலவரை நோக்கி வணங்கும் பாவனையில் எழுந்தருளியுள்ளது.
* திருவாரூர், திருநெல்லிக்காவல் கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் 7 நாளும், மாசி மாதம் 18-ம் தேதி முதல் ஒரு வார காலம் மாலை வேளையில் சூரிய ஒளிக்கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
* தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில். இங்கு மாசி மாதம் 13, 14, 15-ம் தேதிகளில் மாலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மேல் விழும் போது, வீரட்டேஸ்வரரை சூரியன் பூஜை செய்து வணங்குவதாக கூறப்படுகிறது.
* விழுப்புரம் மாவட்டம், பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் சூரியன் வழிபட்ட தலமாகும். சித்திரை முதல் தேதியிலிருந்து 7 நாட்களும், கருவறையிலிருக்கும் சிவலிங்கத் திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் பட்டு வணங்குவதாக கூறப்படுகிறது.
* தஞ்சையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயில். சூரியன் வழிபட்ட தலமான இங்கு, பங்குனி மாதம் 13, 15ம் தேதிகளில் சூரிய பகவான் தன் பொற் கிரணங்களால் வேதபுரீஸ்வரரை வழிபடுவதாக புராணங்கள் கூறுகிறது.
* புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகில் உள்ளது திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில். இச்சிவாலயத்தில் பங்குனி மாதம் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை 7 நாட்கள் தினமும் மாலை 5-30 மணி அளவில் சூரியன் லிங்கத்தை தழுவி பூஜிப்பது அரிய காட்சியாகும்.
– எஸ்.மாரிமுத்து, சென்னை.
