மாட்ரிட்: கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனா அணியை அத்லெடிகோ மாட்ரிட் அணி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு அசத்தியுள்ளது. கிங்ஸ் கோப்பை எனப்படும் கோபா டெல் ரே கோப்பை கால்பந்து போட்டிகள் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்து வருகின்றன. இரண்டடுக்கு அரை இறுதிப் போட்டிகளில் முதல் போட்டி நேற்று நடந்தது.
அதில் பலம் வாய்ந்த பார்சிலோனா அணியும், அத்லெடிகோ மாட்ரிட் அணியும் மோதின. போட்டி துவங்கியது முதல் மாட்ரிட் அணி வீரர்கள் பம்பரமாய் சுழன்று கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் பார்சிலோனா வீரர்கள் தடுமாறினர். 7வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் தவறுதலாக அடித்த ஓன் கோல், மாட்ரிட் அணிக்கு சென்றது.
போட்டியின் 14வது நிமிடத்தில் மாட்ரிட் அணியின் ஆன்டோய்னி கிரீஸ்மான் மேலும் ஒரு கோல் போட்டு அணியை வலுவாக்கினார். 33வது நிமிடத்தில் மாட்ரிடின் அடிமோலா லூக்மேன் ஒரு கோலும், ஜூலியன் அல்வாரெஸ் 45+2வது நிமிடத்தில் அடுத்த கோலும் போட்டனர். அதன் பின் கடைசி வரை கோல் விழவில்லை.
எனவே, 4-0 என்ற கோல் கணக்கில் மாட்ரிட் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் 85வது நிமிடத்தில் பார்சிலோனாவின் எரிக் கார்சியா முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பார்சிலோனா – மாட்ரிட் அணிகள் இடையிலான 2வது அரையிறுதி போட்டி, வரும் மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது.
